சுற்றுலாத் துறைக்கு பெயர்போன நெடுந்தீவு கிராமத்தில் மணல் அகழ்வு முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு மேற்கு J / 2 கிராம சேவகர் பிரிவிலுள்ள சென் லோறன்சியார் தேவாலயத்தினை அண்டியுள்ள கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற கச்சதீவு கிராமமும் இந்த கிராம சேவகர் பிரிவின் நிர்வாகத்தினுள்ளேயே அடங்குவதாகவும் கூறப்படுகின்றது .நூறு மீற்றர் நீளமான பகுதியில் மூன்று அடி ஆழம் வரைக்கும் மணல் அகழப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது .உழவு இயந்திரம் , மற்றும் லான்ட் மாஸ்ரர் போன்றவற்றில் மணல் எடுத்துச்செல்லப்படுவதாகவும் நெடுந்தீவு பிரதேச சபையிலுள்ள ஆளும் தரப்புக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் ஆதரவுடனேயே மேற்படி நாசகார செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் .
அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற நாளிதழ் ஒன்றும் அவ்வாறே குற்றஞ்சாட்டியுள்ளது .கடந்த 17 – 05- 2021 அன்று வெளியான மேற்படி நாளிதழில் வெளியாகியிருந்த செய்தியைக் கண்ணுற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையின் முக்கிய உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அன்றைய தினமே சென்று பார்வையிட்டிருந்தனர் . இவர்களோடு தமிழ் அரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளை உறுப்பினர்களும் மணல் அகழ்வு நடைபெற்றுள்ள கடற்கரையினை பார்வையிட்டிருந்தனர் .
மேற்படி நாளிதழ் செய்தி வெளியாகிய மறுகணமே கடற்கரையில் தோண்டப்பட்ட குழிகளை மூடி மறைக்கும் செயற்பாட்டில் மணல் கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் , மேற்படி மணல் அகழ்வினால் கடல்நீர் முழுவதும் கிராமத்தினுள் ஊடுருவும் நிலை காணப்படுவதாகவும் உடனடியாக மேற்படி சட்டவிரோத செயற்பாட்டினை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு, மணல் கொள்ளையர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென்றும் நெடுந்தீவு காவல்துறை நிலையத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊர்காவற்துறை தொகுதி கிளையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .