கோதாவரி மகா புஷ்கர விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேலானோர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்த கோதாவரி மகா புஷ்கர விழா நெரிசலில் சிக்கியே இவர்கள் உயிரிழ ந்தனர். இவ்வாறு உயிரிழந்தோரில் 23 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
கோதாவரி நதி பாயும் மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதாவரி புஷ்கர விழா கொண்டாடப் படுவது வழக்கம். 144 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மகா புஷ்கர விழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
25ந் திகதி வரை 12 நாட்கள் நடக்கும் இந்த மகாபுஷ்கர விழாவின் போது கோதாவரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இந்த விழா ராஜமுந்திரி கோதாவரி நதியில் கோடகும்பம் என்ற இடத்தில் நேற்றுக் காலை 6.26 மணிக்கு ஆரம்பமானது.
ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் நதியில் இறங்கியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டி யடித்து கொண்டு இறங்கியதால் கூட்ட நெரிசலில் வயதானவர்கள், பெண்கள் பலர் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக்கொண்டு பல பக்தர்கள் நதியில் இறங்கினர்.
இந்த சம்பவத்தில் நதியில் மூழ்கியும், நெரிசலில் சிக்கி மூச்சு திணறியும் 23 பெண்கள் உள்பட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.