கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த சிங்கப்பூருக்கு சொந்தமான MV X-Press Pearl எனும் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் வெடிப்புச் சம்பவம் காரணமாக அதிலிருந்து வீழ்ந்த 8 கொள்கலன்களில் காணப்பட்ட பல பொருட்கள் நீர்கொழும்பு கரையில் ஒதுங்கியுள்ளன.
நீர்கொழும்பின், செத்தபாதுவ, கபுங்கொட கடற்கரையில் இவ்வாறு ஒதுங்கிய பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மீன்பிடி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த சிறிலங்கா விமானப்படையின் Bell-212 உலங்குவானூர்தி தொடர்ந்தும் முயற்சி செய்து வருவதாக, கடற்படை அறிவித்துள்ளது.
இன்று காலை வரை குறித்த கப்பல் மீது 425 கிலோ கிராம் உலர் இரசாயன தூளை சிறிலங்கா விமானப்படை தூவியுள்ளதாக, கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 25 பணியாளர்களில், காயமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இந்தியர்களில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.