வடக்கில் ‘யாஸ்’ புயலின் தாக்கம்: நாளையும் கடும் மழை!

0
674

தென்மேற்கு பருவ பெயர்ச்சி மற்றும் கிழக்கு – மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள ‘யாஸ்’ புயலின் மறைமுக தாக்கத்தின் காரணமாக இன்று புதன்கிழமையும் பலத்த மழை பெய்யும் என்றும், அதிகரித்த வேகத்தில் காற்று வீசும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாஸ் புயலானது வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (26.05.2021) மேற்கு வங்க கடற் பிராந்தியத்தை கடக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள ஆழமான ஆழமற்ற கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசத்தில் கடல் அலையானது 2.5 – 3 மீற்றர் வரை உயர்வடையக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள எச்சரிக்கை

கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையால் களுகங்கை , நில்வளா கங்கை மற்றும் அத்தனுகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை உயர்வடைந்திருந்ததோடு , இந்நதிகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே போன்று களனி கங்ககையின் கெஹெல்கமு ஓயா, களுகங்கையின் குடா ஓயா, மகாவலி கங்கை, அத்தனுகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி

இன்று நாவலப்பிட்டி பிரதேசத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 188.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை – கந்தலோயாவில் 139 மி.மீ, களுபஹன பிரதேசத்தில் 133 மி.மீ, நுவரெலியா – எல்டனில் 121 மி.மீ., இதே போன்று இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொடையில் 101.5 மி.மீ, குருவிட்டவில் 100.5 மி.மீ, களுத்துறை மாவட்டம் – பிம்புர பிரதேசத்தில் 103 மி.மீ., ஹப்புகஸ்தென்யில் 109 மி.மீ. மழை வீழ்ச்சி (இன்று காலை வரை) பதிவாகியுள்ளது.

கழுகங்கையை அண்மித்த பகுதிகளுக்கு எச்சரிக்கை

கழுகங்கையை அண்மித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இரத்தினபுரி, குருவிட்ட, கிரிஎல்ல, அயகம மற்றும் எலபான ஆகிய பிரதேசங்களில் தாழ் நிலப்பகுதிகளில் சிறிதளவு வெள்ளம் ஏற்படக் கூடும் என்று நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மண்சரிவு முன்னெச்சரிக்கை

காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை 09.00 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

(நன்றி:வீரகேசரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here