மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ஆங் சான் சூசி நேற்று முதல் முறை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி சூசியின் அரசை இராணுவம் கவிழ்த்தது தொடக்கம் இராணுவத்தால் அவர் இரகசியமான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தலைநகர் நபியிடோவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் 30 நிமிடங்கள் அவர் தோன்றியதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
75 வயதான சூச்சி நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும் வழக்கு விசாரணைக்கு முன்னர் தனது சட்டக் குழுவினரை நேருக்கு நேர் சந்தித்ததாகவும் வழக்கறிஞர் தே மவுங் மவுங் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளின்போது அவர் வீடியோ வழியான இணைப்பு மூலமே தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறி வோக்கி டோக்கி ரேடியோக்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு சூச்சி முகம்கொடுத்துள்ளார். இதில் அதிக தீவிரம் கொண்ட குற்றச்சாட்டுகளில் அவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் இராணு சதிப்புரட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு இதன்போது இராணுவ அடக்குமுறைகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.