
நமது தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கலைப்படைப்புகள் மூலம் சொல்வதற்கான தகவல்கள் ஓவியர் புகழேந்தியிடம் நிறைய இருக்கின்றன. அவற்றைச் சொல்லும் துணிச்சல் அவரிடம் இருக்கிறது. அவர் காலூன்றி நிற்பதற்கான சமூக அடித்தளம் வலுவாக உள்ளது. உணர்வுள்ள தமிழர்கள் அந்த இளம் படைப்பாளியை தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டுள்ளனர்.
போராட்டக் காலம்தான் இளைஞர்களையும் புதிதாகப் பதியம் போடுகிறது. ஈழத் தமிழர்கள் குவியல் குவியலாக இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 சூலைத் துயரம் தமிழ்நாட்டில் மாபெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அந்த எழுச்சியில் புகழேந்தியின் சமூகப் பார்வை குருத்துவிட்டு, மண்ணைப் பிளந்து கொண்டு வெளியில் வந்தது.
அப்போது பள்ளிப்பருவம், பால் வடியும் முகம், ஈழத் தமிழர்களுக்காதரவான ஊர்வலம், கண்காட்சி, பொதுக்கூட்டம் என, தஞ்சையிலிருந்தும் அதன் சுற்றுப் புறங்களிலும் நடக்கும். எல்லா இடங்களிலும் புகழேந்தி துருதுருவென்று சுற்றி வருவார். பலதரப்பாரிடமும் அவர் தொடர்பு வைத்திருப்பார். புகழேந்தி என்ற சமூக உணர்வுள்ள ஓர் இளைஞர் பல்வேறு அரசியல் பிரமுகர்களிடமும் இலக்கிய வட்டங்களிடமும் தொடர்பு கொண்டு வருகிறார் என்பது தெரிந்தது.
பல்வேறு இடங்களில் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்க்கென்று உறுதிப்பட்ட கொள்கை முடிவுகள் உருவாயின. அநீதி கண்டு பொங்கும் இளமைத் துடிப்பும், ஈரநெஞ்சம், ஈழத் தமிழர்களின் துயரங்களை ஓவியமாக்கச் செய்தன. அவர் நடத்திய முதல் கண்காட்சி சாலையோரத்தில் நடந்தது.
ஓவியத்தில் பட்ட மேற்படிப்பு படிக்க ஐதராபாத் சென்றார் புகழேந்தி. அப்போது ஆந்திரப் பிரதேசத்தில் சுண்டூரில், தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அவர் நெஞ்சைக் கிழித்தது. புகழேந்தியின் தூரிகை போர்க்கோலம் பூண்டது. சுண்டூர் படுகொலையை ஓவியமாக்கினார்.
தமிழர் இன உணர்ச்சியில் முதல்வரிசையில் நிற்கும் புகழேந்தி, குஜராத் நிலநடுக்கத்தில் மடிந்து போன, வீடுவாசல் இழந்துபோன வடபுலத்து மக்களின் துயர் தாங்காமல், தூரிகை தூக்கினார். அதற்காக தனிச்சிறப்பு மிக்க ஓவியங்கள் தீட்டினார். மக்கள் முன்படைத்தார். ஓவியர் புகழேந்தியின் தமிழர் இனஉணர்ச்சி மனித நேயத்தின் அடிப்படையில் உருவானதே அன்றி வெறும் இனவாதத்தில் உருவானதல்ல. தமிழினம் ஒடுக்குண்டு கிடப்பதால் ஏற்பட்ட இன உணர்ச்சி அது.