முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
வேலன் சுவாமிகளோடு இணைந்து பொதுமக்கள் சிலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இனப்படுகொலையின் நினைவாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்கத்தால் ஒருலட்சத்து நாற்பத்தாறாயிரம் மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்துக்கு அமைவாக முதலாவது ஆலமர கன்று ஒன்றும் இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகளால் நடுகை செய்யப்பட்டுள்ளது .
கொவிட்19 சுகாதார விதிகளை மீறாமல் நினைவேந்தலை மேற்கொள்ள தடைஇல்லை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று ஏற்கனவே விதித்த தடை உத்தரவை திருத்திய கட்டளை ஆக்கி தீர்ப்பு வழங்கிய நிலையில் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் பிரதேசம் உள்ளடங்கும் பொலிஸ் பிரிவு உட்பட ஏனைய இரண்டு பொலிஸ் பிரிவுகள் சேர்த்து முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று திங்கட்கிழமை எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் படையினர் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.