தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2021 எதிர்வரும் 17-07-2021 சனிக்கிழமையன்று நடைபெறும். தற்போதுள்ள இடர்மிகு நிலை காரணமாக இவ்வாண்டு வளர்தமிழ்-1 தொடக்கம் வளர்தமிழ்-12 வரையான வகுப்புகளுக்கு புலன்மொழிவளத் தேர்வு இல்லாமல், எழுத்துத்தேர்வு மட்டுமே நடைபெறும்.
தேர்வு விண்ணப்ப முடிவுநாள் 10-06-2021. தமிழ்ச்சோலைகளில் கற்கும் மாணவர்கள் தங்கள் நிர்வாகியுடன் தொடர்புகொண்டு, 31-05-2021 இற்கு முன் தேர்வுப் பதிவினை உறுதிப்படுத்திக்கொள்ளவும். தமிழ்ச்சோலையுடன் தேர்வில் இணைந்துகொள்ளும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
கடந்த கல்வியாண்டில் தனித்தேர்வராக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு விண்ணப்பப்படிவம், தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அவரவர் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முதல்முறை தனித்தேர்வராகத் தோற்றவுள்ள மாணவர்கள் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்வு விண்ணப்பப் படிவத்தையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tamoulcholai.fr என்ற எமது இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக வருகை தருவோரின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் எமது பணியக நேரத்தை நீடித்துள்ளோம். அதற்கமைய தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், 19-05-2021 தொடக்கம், தேர்வு விண்ணப்ப முடிவு நாளான 10-06-2021 வரைக்கும், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 13.00 முதல் 19.30 வரையும், வார இறுதி நாட்களில் 11.00 மணிமுதல் 19.30 வரையும் திறந்திருக்கும். தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு முகங்கொடுத்து, குறுகிய கால அவகாசத்திற்குள் தேர்வினை நடாத்துவது என்பது ஒரு பெரும் அறைகூவலாக எம்முன் நிற்கின்றது. அனைத்துத் தடைகளையும் தாண்டி தேர்வினை சிறப்பாக நடாத்தி முடிக்க, அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.