பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்படும் கழகங்களுக்கு இடையேயான மெய்வல்லுநர் தெரிவுப்போட்டி கடந்த 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 11.07.2015 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் சிறப்பாக இடம்பெற்றிருந்த நிலையில் இறுதிப்போட்டிகள் கடந்த 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை CENTRE SPORTIF NELSON MANDELA AVENUE PAUL LANGEVIN 95200 SARCELLES பகுதி மைதானத்தில்; மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தலைவரும் தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் பிரதம நேரக்கணிப்பாளருமான திரு. பொ. நந்தகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 12.10.1987 அன்று இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் அகிலன் அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. மலர்வணக்கத்தை 01.05.2008 அன்று முகமாலை வெற்றிச் சமரில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப்ரினன்ட் இசைப்பிரியனின் சகோதரரும் 07.03.2008 அன்று மன்னாரில் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் தமிழ்பிரியாவின் சகோதரரும் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சுக் கொடியினை சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து கழகங்களின் கொடிகள் ஏற்றப்பட்டன.
சமநேரத்தில் கழகங்களின் தலைவர்கள் கழகக் கொடிகளை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடரினை தமிழர் மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரன் செல்வன் சிறிகஜேந்திரா பத்மஜன், சிறந்த விளையாட்டு வீராங்கனை செல்வி நவராசலிங்கம் துசியாவும் ஒலிம்பிக் சுடரினை ஏற்றிவைத்தனர்.
உறுதிப்பிரமாணத்தைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்கள், பிரமுகர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்க, சீரான கட்டளையைப் பின்பற்றி முழவு வாத்திய அணிவகுப்பைப் பின்தொடர்ந்து கழகங்களின் அணிநடை மைதானத்தை வலம்வந்தது. நல்லூர்ஸ்தான் வி.க., தமிழர் வி.க. 94 ஆகிய இரண்டும் அணிநடையில் முதல் இடத்தைப் பிடித்துக்கொள்ள, தமிழர் வி.க. மூன்றாம் இடத்தைத் தனதாக்கியது.
தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. அரியாலை ஐக்கிய வி;.க., வட்டுக்கோட்டை வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., யாழ்ட்டன் வி.க., ஈழவர் வி.க., ., தமிழர் வி.க. 93, ., தமிழர் வி.க. 94, ., தமிழர் வி.க. 95 ஆகிய கழகங்களிடையே போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
கரப்பந்தாட்டம் ஒழுங்கு படுத்தியடித்தலில் முதலிடத்தை யாழ்ட்டன் வி.க., இரண்டாம் இடத்தை அரியாலை ஐக்கிய வி.க., மூன்றாம் இடத்தை தமிழர் வி.க. 93 என்பன பெற்றுக்கொண்டன.
உதைபந்தாட்டத்தில் முதலிடத்தை தமிழர் விக. 93 ம் இரண்டாம் இடத்தை நல்லூர் ஸ்தான் வி.கவும் மூன்றாம் இடத்தை ஈழவர் வி.கவும் பெற்றுக்கொண்டன.
மெய்வல்லுநர் போட்டிகளில், முதலிடத்தை நல்லூர்ஸ்தான் வி.க.வும் இரண்டாமிடத்தை தமிழர் வி.க.93 ம் மூன்றாம் இடத்தை யாழ்ட்டன் வி.கவும் பெற்றுக்கொண்டன.
அனைத்துப்போட்டிகளிலும் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துக்கொண்ட கழகங்களின் விபரம் வருமாறு:-
தமிழர் விக. 93 (245 புள்ளிகள்), நல்லூர் ஸ்தான் வி.க (229 புள்ளிகள்), ஈழவர் வி.க. (66 புள்ளிகள்).
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர் பாலசுந்தரம் அவர்கள் உரைநிகழ்த்தினார். அவர் தனது உரையில், மாவீரர்கள் எமது விடிவிற்காகவே தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்கள், இளைஞர்களை சீரான பாதைக்கு கொண்டுசெல்வதற்காகவே இவ்வாறான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதற்காகவே நாம் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். சிறிலங்காவில் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். எனவே இங்கு எமது இளைஞர்கள் ஒற்றுமையாக ஆக்கபூர்வமான பாதையில் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் நிறைவாக வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், பதக்கங்களும் அணிவித்துவைக்கப்பட்டன.
கொடிகள் இறக்கிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரவு 8.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் கைகளைத் தட்டி நின்றனர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தன.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் இறுதிப்போட்டிகள் – 2015