14/05/2009 அன்றைய நாள் எமது ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டமும் ஒரு முற்றுகைக்குள் வந்த நாள். இன்றைய நாள் வட்டுவாகல் கடற்கரை ஊடாகவும் முள்ளிவாய்க்கால் கடற்கரை ஊடாகவும் நகர்ந்து வந்த படையினர் கப்பலடி பிரதேசத்தில் ஒன்றுசேர்ந்தனர். இதுவரை நாளும் இருந்த ஒரேயொரு வெளித் தொடர்புக்கான கடல்வழிபாதையும் சிங்களப்படைகளால் முற்றுகைற்கு உள்ளாக்கப்படுகிறது. இப்போது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தினுள் மூன்று பக்கத்தாலும் படையினர் சூழ ஒரு பக்கம் நந்திக்கடலும் அதற்கு மறுபக்கம் கேப்பாப்பிலவு கரையிலும் சிங்களப்படைகள் என முழுமையான முற்றுகைக்குள் விடுதலைப்புலிகளும் விடுதலையை விரும்பி பயணித்த மக்களும் சிக்குண்டனர்.
இராணுவம் மூன்று பக்கத்தாலும் நெருக்கிக் கொண்டு வரத்தொடங்கியது.
இந்த குறுகிய பிரதேசத்தினுள் இலட்சங்கணக்கான மக்களும் அவர்கள் தம்முடன் நகர்த்திக் கொண்டுவந்த வாகனங்கள் விலங்குகள் என்று இடம் இல்லாமல் நிறைந்து இருந்தன. முள்ளிவாய்க்கால் மண் அதே நேரம் சிங்களப்படைகளின் வான்படை மிகத்தாழ்வாக பறந்து தாக்குதலை நடத்தியது. தரைப்படையினரின் பல்குழல் எறிகனை மற்றும் ஆட்டிலறி தாக்குதலும் இடைவிடாது நடந்துகொண்டேயிருந்தது. சிங்களப்படைகளின் ஏறிகணை முள்ளிவாய்க்கால் மண்ணை தொடுவதென்றால் பல அப்பாவி தமிழ்மக்களின் உயிரை பறித்துக் கொண்டும் காயப்படுத்திக் கொண்டும் ஒவ்வொரு எறிகணையும் தனது இனஅழிப்பு நடவடிக்கையை செய்தன. போராளிகளும் தம்மால் முடிந்தளவு எதிரிக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தனர். பல நூறு போராளிகளும் காயப்பட்டுருந்தனர் இருந்தபோதிலும் இறுதிவரை சண்டை பிடிக்கும் முடிவில் தேசியத் தலைமையும் உண்மையான போராளிகளும் இருந்தனர். ஒவ்வொரு அடி நிலமும் மாவீரர்களின் வித்துடல்களைத் தாண்டியே சிங்களப் படைகள் ஆக்கிரமித்தனர்.