நீங்கிடாத வலிகள்..
* **
வாழ்ந்த வீட்டின் மேல்
வானூர்தி குண்டு போட
வாழ்விடம் தனை இழந்து
வேற்றிடம் நகர்ந்தோம்..
வேர்விட்டு வாழ்ந்த எங்கள்
வீட்டை விட்டு
வெளியேறி வழியின்றி
வீதியில் நின்றோம்..
தூக்கம் தொலைத்து
ஏக்கம் அதிகரித்து
அக்கம் பக்கம் பார்த்தபடி
துக்கத்துடன் பயணப்பட்டோம்..
வீதியில் இறங்கி
பாதியில் ஓரிடத்தில்
பாயினால் வீடுகட்டி
பசியோடு படுத்தோம்..
தற்காலிக இருப்பிடமும்
தரைமட்டம் ஆனது
எதிரியவன் ஏவிய
எறிகணை வீச்சினால்
ஒப்பாரி ஓலம்
ஓங்கி ஒலிக்க
தப்ப முடியவில்லை
தறிகெட்டு வந்த பல்குழல் பீரங்கிக்கு
எப்படியும் காப்பாற்றி விடுவேன்
என் பிள்ளையை என்று..
எண்ணி எண்ணியே
எட்டி நடந்தோம் மற்ற இடத்திற்கு
இரட்டிப்பு வேகம் கூட
இதயத்தில் வலியும் சேர
இருக்கும் இருப்புகளும் குறைய இடம்பெயர்ந்தோம் முள்ளிவாய்க்காலுக்கு..
கொத்துக் குண்டுகளால்
கொத்துக் கொத்தாய் எம்மவரை
கொன்று போட
துடி துடித்தோம் வேதனையால்..
கூட இருந்தவரை
குழியினுள் புதைத்து விட்டு
பதுங்கு குழிக்குள்
பதுங்கிக் கொண்டோம்..
நேற்று வரை பால் குடித்த
நான் பெற்ற செல்ல மகள்
பகைவனின் குண்டு பட்டு
உயிரற்ற உடலானாள்..
இருப்பவர் உயிர் காக்க
இடம் அமைத்த என் அண்ணன்
இடதுகை துண்டாகி
இரத்தம் சொட்டச் சொட்ட
இறந்துபோனான் கண்முன்னே..
“அம்மா” பசிக்கிறது
அருகிருந்து கேட்ட மகள்
பசியுடன் பதறியபடியே
பலியானாள் ..
இரத்த அழுத்தம் அதிகரித்து
சர்க்கரை அளவு குறைந்து
உணவின்றி தேகம் சுருண்டு
உறக்கத்தில் உயிரை விட்டார்
என் தாத்தா..
உறவுகளை இழந்து ஓடி ஓடி
ஊர் விட்டு ஊர் வந்து
சோர்ந்து போனோம்
ஓய்ந்தும் போனோம்..
அகதி என்ற பெயர் தாங்கி
அடைக்கலம் தேடி
அலைந்து அலைந்து
அவதிப் பட்டோம்..
வழிகளும் இன்றி
விழிகளும் கலங்க
துயரங்களும் கூட-மனச்
சுமைகளும் அதிகரிக்க
உயிரோடு மரணித்து போனோம்..
நச்சுப் புகைகளின் விசத் தன்மை
நாசியை நிறைக்க வியர்வை
நாற்றம் வயிற்றைப் புரட்ட
இரத்த வாடை இதயத்தை அறுக்க
பிணங்களின் குவியல் மனங்களை ரணமாக்க..
போட்டது போட்டபடி
உடுத்திய உடைகளுடன் ஒன்றுமில்லாமல் ஒருவர் பின் ஒருவராக
ஒழிந்து கொண்டும்
ஒதுங்கிக் கொண்டும்
வலிகளோடு கடந்தோம்
வட்டுவாகலை..
தீராத வலிகளுடன்
அருந்தமிழ்
13/05/2021