இனப்படுகொலை நீதிக்கான ஒரு தசாப்தத்தைக் கடந்திருந்தாலும், இலக்கினை எட்டும் வரைக்கும் தொடர்ந்து பயணிப்போம் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-அடக்கு முறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர,விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது.
முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல.முள்ளிவாய்க்கால் நினைவுத்திறம் கடந்த காலம் தொடர்பானது மட்டுமல்ல,எதிர்கால அடக்குமுறைக்கெதிரான இயங்கியல் தொடர்பானது.
கொத்துக் கொத்தாய் இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை, அவர்களது கனவுகளைச் சுமந்து கனத்து நிற்கின்றது முள்ளிவாய்க்கால் மண். மே 18 நினைவேந்தல் தமிழ் இனப்படுகொலை நீதிக்கான ஒரு தசாப்தத்தைக் கடந்திருந்தாலும், இலக்கினை எட்டும் வரைக்கும் தொடர்ந்து பயணிப்போம் என்ற வாஞ்சை ஈழத்தமிழர்களை ஒருங்கிணைக்கின்றது.
எமது வளங்களை ஒன்றிணைத்து, கடந்த கால பட்டறிவிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு புதிய உத்திகளைக் கையாண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அழைப்பு விடுக்கின்றது.
சிங்கள-பௌத்த அரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நிராகரித்து, இறுதிப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரித்து வந்துள்ளது.
பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரிப்பதன் மூலம் பாரிய இனப்படுகொலையை நியாயப்படுத்தி வந்துள்ளது.
இறுதிப் போரை சிங்கள-பௌத்தத்திற்கு கிடைத்த வெற்றியாக பிரதிபலித்து மகாவம்ச வரலாற்றியலில் – சிங்கள வரலாற்றியலில்,- சிங்கள-பௌத்த தேச-அரச கட்டுமானத்தை இன்னும் இறுக்கமாக முன்னெடுத்து வருகின்றது.
ஒற்றையாட்சிக்குள் மையத்தை வலுப்படுத்துவதன் ஊடாக, அதிகாரப் பரவலாக்கத்தை நீர்த்துப் போகச் செய்து தமிழர்களின் அரசியல் கோரிக்கையை வலுவிழக்கச் செய்து வருகின்றது.
தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்கை துண்டாடி, ஆட்புல கட்டுறுதியை உடைப்பதன் வழியாக தாயகக் கோரிக்கையை கேள்விக்குட்படுத்தி வருகின்றது. இ
ராணுவமயமாக்கலை வடக்கு-கிழக்கில் செறிவாக்கி அரசிற்கெதிரான எதிர்ப்பை அடக்கிவருகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.
பின்முள்ளிவாய்க்கால் அரசியல்-வரலாற்றுத் தளத்தில் நினைவு கூரலை சிங்கள அரசு தொடர்ந்தும் ஈழத்தமிழர்களுக்கு மறுத்தே வந்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டு தார்மீக உரிமையான நினைகூரல் பல ஆயிரம் ஆண்டுகளைக்கொண்ட பாரம்பரியம்.
ஒவ்வொரு வருடமும் இராணுவமயமாக்கல் மூலம் நினைவுகூரலை தடுப்பதற்கான முயற்சிகளை சிங்கள அரசு மேற்கொண்டு வருவதை ஈழத்தமிழ் மக்கள் அறியாமலில்லை, இருந்தும் அத்தடைகளையெல்லாம் உடைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஈழத்தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர்களின் விடுதலை மையம்.
இம்முறையும் சிறீலங்கா அரசு கோவிட்-19ஐ காரணம் காட்டி நினைவுகூரலை தடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றது ஆனால் நிச்சயமாக போர் வெற்றியை கொண்டாடப் போகின்றது.
ஏனெனில் போர் வெற்றி சொல்லாடலை சிங்கள-பௌத்த கூட்டு உளவியலில் தக்க வைக்க வேண்டிய அவசியம் சிங்கள அரசிற்கு இருக்கின்றது.
போர் வெற்றிக்கு எதிரான மாற்றுச் சொல்லாடலாக, முள்ளிவாய்க்கால் இருந்து கொண்டே இருக்கப்போகின்றது.
அதனால் தான் சிங்கள அரசு முள்ளிவாய்க்கால் நினைகூரலை தடைசெய்கின்றது.
முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கோவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, காலை 10.30 மணிக்கு, தமிழ் இனப்படுகொலை, நினைவேந்தல் முற்றம், முள்ளிவாய்க்காலில் ஒழுங்கமைக்கப்படும்.
அன்றைய நாள் முழுவதும் மக்கள் அஞ்சலிக்காக நினைவேந்தல் முற்றம் தயார்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு மகாணங்களிலும் ஏனைய இடங்களிலும், மே 18 அன்று மாலை 6மணிக்கு ஆலயங்களிலும், கோவில்களிலும் மணி ஒலித்து அக வணக்கம் செலுத்தி, வீடுகளிலும், மதவழிபாட்டுதலங்களிலும், பொது இடங்களிலும் விளக்கேற்றி, முள்ளிவாய்க்கால் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்காக மே 18 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறி தமிழ் இனப்படுகொலை நாளை தமிழ்த் தேசிய துக்க நாளாக அனுஸ்டிக்குமாறும், இயலுமானவரைக்கும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைப் பொதுப் படிமத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எண்ணிம தளத்தையும் நினைவுகூருவதற்கு பயன்படுத்துவதோடு, தமிழ் இனப் படுகொலைக்கு நீதி வேண்டிய பயணத்தில் வேறுபாடுகளைக்களைந்து, ‘ஈழத்தமிழ்த்தன்மையில்’ ஒன்றிணைந்து செயற்பட வடக்கு-கிழக்கு சமூக அமைப்புக்கள், மத நிறுவனங்கள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றாக அழைப்பு விடுக்கின்றன.
இவ் நினைவுகூரலுக்கு முஸ்லிம், பெரும்பான்மை முற்போக்குச் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு தொடர்ந்து குரல்கொடுத்து நீதிப் பயணத்தில் இணைய அழைக்கப்படுகின்றார்கள்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.