தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 11.07.2015 சனிக்கிழமை பிரான்சின் சார்சல் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர் திரு. ரூபன் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 05.11.1999 அன்று நெடுங்கேணிப் பகுதியில் வீரச்சாவடைந்த மேஜர் அருளன் அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.
கரும்புலி கப்படன் மில்லர் அவர்களின் திருவுருவப்படத்திற்கான சுடரினை லெப். இளந்தேவன் அவர்களின் சகோதரரும் கடற்கரும்புலி அங்கையற்கண்ணி அவர்களின் திருஉருவப்படத்திற்கான சுடரினை இரண்டு மாவீரர்களின் சகோதரம் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. அமைதியாக அணிவகுத்து அனைவரும் கரும்புலி மறவர்களுக்கான மலர்வணக்கத்தைச் செய்தனர்.
தொடர்ந்து கரும்புலிகள் நினைவான நடனம் மற்றும் உரைகள் இடம்பெற்றன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முக்கிய உறுப்பினர் திரு.சத்தியதாசன் அவர்களும், பிரான்சு தமிழ்சோலைத் தலைமைப்பணியக உறுப்பினர் திரு. அகிலன் அவர்களும் கரும்புலி வீர மறவர்களின் காவியம் பற்றி உரை நிகழ்த்தியதுடன், சமகால நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
நிழ்வின் நிறைவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டியதுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.