
நீளும் துயரமாய்!
மீளாது போனது இரு ஆறு
துயர ஆண்டுகள்
கூண்டுக்குள் மட்டுமே இன்னும்
தொடர்கதையாய் உறவுகள்
விடியல் தேடிய விழிகளுக்கு
விடையாய்ப் போனது
விழி பறித்த குரோத யுத்தம்!
மேதினி மறக்கவொண்ணா
மே பதினெட்டு
மெல்லியதாய் நம்பிக்கைக்
கீற்றைத் தரவும் இல்லை
சொல்லியழப் பழைய துயரென்று
விட்டுவிட முடியாதே!
நந்திக்கடல் இன்னும்
நம்பிக்கையிழந்து தானிருக்கிறது
வந்துசேரும் நீதியென்று
வான்பார்த்த உயிர்களெல்லாம்
வெம்பி விழுந்து உடலமானது
இந்தக் கடலில் தானே!
கொத்துக் கொத்தாய்
இலட்சக்கணக்காய் இனியும்
இருப்பது என்ன தான்
கடத்தும் நாட்கள் கலியுடனே!
கொடிய யுத்தம் கொலைவெறி
கோரத்தாண்டவம்
இராட்சதக் கழுகுகள்
கடித்துக் குதறிய உடலங்கள்
எப்படி எப்படி மறப்பது!
வேண்டும் நீதி வேண்டும்
எம் நிலம் வேண்டும்!
உறவுகள் உயிர்ப்பலிக்கு
நீதி வேண்டும்!
கூண்டுக்குள் சிக்குண்டு
தவிப்போர் கூடுவிட்டு மீள
வேண்டும்!
அங்கம் இழந்தோர் வாழ வழி
வேண்டும்
ஓயாது ஒழியாது குழிகளுக்குள்
உறங்குவோர் அர்ப்பணிப்புக்கு
நீதிவேண்டும்!
மே பதினெட்டு அழியாது
எம் நெஞ்சில் துரோகமாய்
நிலைத்த வடுவானது!
சிவதர்சினி இராகவன்