திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கில் நேற்று மூன்றாவது நாளாக புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் இதுவரை பத்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பரிசோதனை நடவடிக்கையில், திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, சட்டவைத்திய அதிகாரி, குற்றவியல் தடயப் பொலிஸ் பிரிவினர் மற்றும் நில அளவை திணைக்களத்தினர் ஆகியோர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி புனரமைப்பு செய்யப்பட்ட போது 5 அடி ஆழத்தில் மனித எலும்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து அந்தப் பகுதியை நேரில் பார்வையிட்ட திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கட்டுமானப் பணிகளை இடைநிறுத்த உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அங்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்களுக்கு செல்ல இதுவரையும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.