கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைப்படுவான். ஆனால், குடும்பத்தின் வறுமைநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்புக்குப் பின் அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை.
அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும்.
வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான்.
முற்றத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் ஏறி பூக் கொய்துகொண்டு வந்து கொடுத்து…
“இதிலை ஏதாவது செய்யணை….. சாப்பிடுவம்” என்று சொல்வான்.
சிதம்பரம் ஏற்கெனவே கலகலப்பானவன்.
துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது, எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான்.
சந்திரனாக இருந்தவன் தான்…., 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான்.
ஆரம்ப நாட்களில்…..
பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது.
இப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன் வீரமைந்தனை நினைவு கூருகிறாள் …..
“அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேணும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம்.
….. அந்த மாதிரிப் பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரனாய்….”
அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள்.
தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்..
“நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம்.
அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி.
கடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்று நிலைமையைப் புரிந்துகொண்ட சிதம்பரம் தானே முன்வந்து, ‘நான் போறேன் அண்ணை ’ என்று சொன்னான்.
சிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான்.
ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது.
அபிதா கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார்.
கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன்
இறுதி நேரத்தில் கடலில் ….. சிதம்பரம் – ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன. அது ஒரு முன்னிரவு நேரம்.
எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது.
சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள்.
“நாங்கள் கதைக்கிறது விளங்குகிறதா…?” எனக் கேட்டோம்.
“நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேட்கிறது.” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள்.
மேலும் சில நிமிடங்கள் சென்றன……
சிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும்.
அப்போது…… ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்….’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர்.
குரலில் பதட்டமோ அலது தயக்கமோ தென்படவேயில்லை, கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது.
மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் …
‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’
‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.
கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள்.
அப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக……
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிச்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது.
“கடற்கரும்புலித் தாக்குதலுக்குள்ளான அபிதா கடற்படைக் கப்பல்” கடற்கரும்புலித் தாக்குதலுக்குள்ளான அபிதா கடற்படைக் கப்பல் “அபிதா” கப்பல்……………………………. அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன.
பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள். ஆம் 1991 வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒரு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.
1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஜய வீர, உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி. தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஜயரத்தினா கூறியிருந்தார்.
இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன் விஜயரத்தினா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் சாவுக்கு அஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் அச்சமும் சேதமும் ஏற்படுகிறது என்றார்.
கடற்கரும்புலி ஜெயந்தன் அவர்களின் நினைவாக அவரின் பெயரில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஜெயந்தன் படையணி உருவாக்கப்பட்டது. இப்படையணி போர்க்களங்களில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !