1995 முதல் 1998 வரை வெளியிடப்பட்ட சுவிற்சர்லாந்துப் பணத்தாள்கள் கட்டணவழங்கீடாக இன்று 30. 04. 21 வெள்ளிக்கிழமை முதல் செல்லுபடியாகாது என சுவிற்சர்லாந்தின் தேசிய வங்கி அறிவித்துள்ளது.
இருந்தபோதும் இப்பணத்தாள்கள் தமது பெறுமதியை இழக்காது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
சுவிற்சர்லாந்தின் தேசியவங்கி அறிவித்தலிற்கு அமைய புகழ்மிக்க சிற்பி, ஓவியர், வரைஞர் எனப் பல்திறன் ஒருங்கிணைந்த கலைஞர் திரு. அல்பேர்ற்ரோ யக்கோமெற்றி, திருமதி சோபி கெர்னியெற் ரொய்பெர் அவர்களின் படைப்புக்கள் பொறிக்கப்பட்ட பழைய 10, 20, 50, 100 மற்றும் ஆயிரம்பிராங் தாள்கள் இனிவரும் நாட்களில் கடைகளில், சந்தைகளில், நிறுவனங்களில், உணவகங்களில் கட்டணவழங்கீடாகப் பயன்படுத்த முடியாது.
தபாலகத்தில், தொடருந்துநிலையத்தில் 30.10.21 வரை ஏற்றுக்கொள்ளப்படும்
சுவிசின் பழைய பணத்தாள்கள் கடைகளில் செல்லாது என்றபோதும் தபாலகங்களில் 30.10.21 வரை கட்டணங்களைச் செலுத்த ஏற்றுக்கொள்ளப்படும். அதுபோல் சுவிசின் பொதுப்போக்குவரத்து துறையான சுவிற்சர்லாந்து தொடருந்துநிலையத்திலும் கட்டம் செலுத்த மேற்கண்ட காலம்வரை பழைய பணத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
பழையபணம் கட்டணவழங்கீடாக செல்லாது/-, ஆனாலும் மதிப்பிழக்காது!
- 2020ல் சுவிசின் பழைய பணத்தாள்களை தேசியவங்கியில் மாற்றிக்கொள்வதற்கான காலவரையறை நீக்கப்படும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டத்தின்படி சுவிற்சர்லாந்து அரசு வெளியிட்ட பழையபணத்தாளை புதிய பணத்தாளாக சுவிற்சர்லாந்து தேசியவங்கியின் சூரிச் (Schweizerische Nationalbank, Börsenstrasse 15, 8001 Zürich) மற்றும் பேர்ன் (Schweizerische Nationalbank, Bundesplatz 1, 3003 Bern) பணப்பதிவேட்டு நிலையத்தில் பொதுமக்கள் எப்போதும் நேரில் சென்று அல்லது தபாலில் அனுப்பி மாற்றிக்கொள்ளலாம். ஆகவே கட்டணவழங்கீடாகப் பழைய சுவிஸ் பணத்தாள் செல்லாதபோதம் அதன் மதிப்பை அது இழக்கவில்லை.
தொகுப்பு: சிவமகிழி