சம்பூர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 818 ஏக்கர் பொது மக்களின் காணிகளை உரிய மக்களுக்கே வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் இலங்கை முதலீட்டு சபையிடம் இந்த காணிகளை கையேற்றிருந்த கேட்வே இன்டர்ஸ்றீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுமக்கள் தமது உரிய நிலைகளை போய் பார்வையிடவும் அனுமதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் சம்பூர் பகுதியில் பொதுமக்களின் காணிகள் 818 ஏக்கர் பறிமுதல்செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் இந்த காணிகள் இருந்த நிலையில் ஆட்சி மாற்றத்துடன் சம்பூர் பாதுகாப்பு வல யத்தில் இருந்த 818 ஏக்கர் காணிகளும் பொது மக்களிடமே விடுவிக்கப்படுவதாக மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணியில் தமக்கு சொந்தமான 237 ஏக்கர் காணியும் உள்ளதாக தெரிவித்து கேட்வே நிறுவனத்தால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து இந்த காணிகளை விடுவிப்பதற்கு நீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் கேட்வே நிறுவனம் காணிகளை உரிமை கோரமுடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கபட்டிருந்த நிலையில் இதை யாரும் உரிமை கோர முடியாது எனவும் பொது மக்களுக்கே இந்த நிலங்களை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் கேட்வே நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அத்தோடு இந்த காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த வழக்கில் பொதுமக்களின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்த அதேவேளை இலங்கை முதலீட்டு சபை சார்பில் சட்டத்தரணி காமினி பரணகம ஆஜராகியிருந்தார்.
இது குறித்து சட்டத்தரணி சுமத்திரன் கேசரிக்கு தெரிவிக்கையில் ,
காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்த நிலையில் குறித்த நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருந்ததால் இந்த காணிகளில் பொதுமக்கள் பார்வையிட முடியாது என்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாம் உரிய காரணங்களை முன்வைத்து பொதுமக்களுக்கு சொந்தமான இந்த காணிகளை அவர்களுக்கே மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். எனவே இந்த காணிகளில் உரிய மக்கள் குடியேற முடியும். அத்தோடு மக்கள் இன்றுமுதல் சம்பூர் பகுதியில் உள்ள தமது காணிகளை பார்வையிட முடியும் எனவும் தெரிவித்தார்.
Close