கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 11 அப்பாவி பொதுமக்களும் கொழும்பு சைத்தியவீதியில் உள்ள கடற்படைத்தளத்திற்கு அருகிலிருந்த இரகசிய இடத்திலும் திருகோணமலை கடற்படைத்தளத்திலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் போதிய ஆதாரங்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், திருகோணமலை கடற்படைத்தளத்தில் தடுப்பு முகாம் ஒன்று இருந்தமைக்கான ஆதாரங்களும் அதில் அடங்குவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
தெஹிவளையில் வைத்து 2009 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தனர். இதேபோல் கொழும்பில் மேலும் ஆறு பேர் அந்தக்காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் போயினர். இவர்கள் காணாமல் போனது தொடர்பிலான வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் கோட்டை பிரதான நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே மேலதிக விசாரணை அறிக்கையூடாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் மனிதக்கடத்தல், மற்றும் படுகொலைப்பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இந்த அறிக்கையில் திருகோணமலை கடற்படை முகாமை நீதிமன்ற உத்தரவுக்கமைய தான் தனது குழுவினருடன் சோதனைக்கு உட்படுத்தியதாகவும், அதில் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று இருந்தமைக்கான ஆதாரங்களை இப்போது தம்மால் சேகரிக்க முடிந்ததாகவும், கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 11 பேரில் பலர் அங்கு தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் 22 ஆதாரங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் தற்போதைய கடற்படைத் தளபதி உள்ளிட்ட பல கடற்படை அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பெறவேண்டி உள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் மனிதக்கடத்தல் மற்றும் படுகொலைப்பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா மன்றில் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிவான், சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. யுத்தம் நடைபெற்ற 2008 , 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பெருமளவான தமிழர்கள் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவுமே தெரியவரவில்லை. படைத்தரப்பினராலேயே இவர்கள் கடத்தப்படுவதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டன. யுத்தத்தின் போது கைதுசெய்யப்பட்டோர் பலர் காணாமல் போயினர். கொழும்பில் நாள்தோறும் கடத்தல்கள் தொடர்ந்துவந்தன. வீட்டிலிருந்து வெளியில் செல்லும் ஒருவர் மீண்டும் வீடு திரும்ப முடியுமா? என்ற சந்தேக நிலை அந்தகாலத்தில் காணப்பட்டது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே ஐந்து மாணவர்கள் தெஹிவளையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். வெளிநாடு செல்லவிருந்த ஒரு மாணவன் அவனது நண்பர்களுடன் இரவு உணவுக்காக ஒன்றாக சென்றபோதே இந்த ஐவரும் கடத்திச்செல்லப்பட்டிருந்தனர். இவ்வாறு கடத்தப்பட்ட மாணவர்களது பெற்றோர்களிடம் கப்பமும் கோரப்பட்டது. ஆனால், கடத்தப்பட்ட இந்த மாணவரின் கதி குறித்து இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஐந்து மாணவர்களது பெற்றோரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கிணங்க நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் சாட்சியம் அளித்திருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையைச் சேர்ந்த சம்பத் முனசிங்க என்பவருக்கும் வேறு பலருக்கும் தொடர்பு இருப்பதாக சாட்சியங்களின் போது தெரிவிக்கப்பட்டது. கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விசாரணை கடந்த முறை நடைபெற்ற போது முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிடம் இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மனுதாரர்களின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜாவும் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கடத்தல்களுடன் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளதாக சாட்சியங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது. கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலைச்சம்பவத்துடனும் ஐந்து மாணவர் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு பட்டிருப்பதாக கூறப்படும் கடற்படையைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டிருக்கின்றது.
இவற்றிலிருந்து கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், கடத்தல், மற்றும் படுகொலைகளில் ஈடுபட்ட குழுவினர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது புலனாகின்றது. குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தற்போது இந் த விடயங்கள் நிரூபணமாகி வருகின்றன.
யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் காணாமல் போன ஆயிரக் கணக்கான தமது உறவுகளை தற்போதும் மக்கள் தேடிவருகின்றனர். காணாமல் போன தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிய முடியாது அவர்கள் நாள்தோறும் தவித்து வருகின்றனர்.
தமது உறவுகளை அவர்கள் தேடித்தேடி தற்போது களைப்படைந்துவிட்டனர். அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றிடம் அழுதுபுலம்பி சாட்சியங்களை அளித்தபோதிலும், இதுவரை எதுவித பலனும் ஏற்படவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் தற்போதும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது. பெருமளவானோர் இந்த ஆணைக்குழு முன் தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை விட ஜனாதிபதி ஆணைக்குழுவானது வெறும் கண் துடைப்பு என்றும் இதனால் எந்தவிதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்று பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்ற போதிலும், காணாமல் போன தமது உறவுகளுக்கு நடந்த கதி குறித்து அறியமுடியாது ஒவ்வொரு உறவுகளும் ஏங்கித்தவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் கொழும்பில் ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் தற்போது கடற்படையினர் மீது குற்றம்சாட்டப்படுகின்றது. உண்மையிலேயே இந்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அறிவிக்கப்படவேண்டும். இதேபோல் நாட்டில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்பது குறித்த பதில் கூறவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இந்த பொறுப்பிலிருந்து அரசாங்கம் தவறிவிடமுடியாது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளின் போதும் இந்த விடயங்கள் தொடர்பில் நிச்சயமாக ஆராயப்பட்டி ருக்கும். ஐ.நா.வின் அறிக்கையானது செப்டெம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. முன்னைய அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்தில் தவறிழைத்தமையினாலேயே சர்வதேச விசாரணை நடத்தப்பட்டது. எத்தகைய விசாரணை நடத்தப்பட்டாவது காணாமல் போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.