‘அன்னை பூபதி’யின் நினைவு தினத்தினை, அவரது சமாதிக்கு சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வர் சாந்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,
‘நாவலடியில் உள்ள எங்களது அன்னையின் சமாதியில் நாங்கள் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக நினைவேந்தல் அனுஷ்டித்து வருகின்றோம். ஆனால் இன்று எங்களது குடும்பத்தினை அங்கு சென்று நினைவேந்தல் அனுஷ்டிக்க வேண்டாம் எனவும் மீறி அனுஷ்டித்தால் கைது செய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரை புதைத்துள்ள இடத்தில் அனுஷ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது மிகவும் கவலைக்குரியது. இது அரசியல்சார்ந்த செயற்பாடு அல்ல அன்னை பூபதி எனது தாயார். எனது தாயாரின் இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எந்தவித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.
எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர்துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்த போராட்டத்தினையும் நடாத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்திய படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்கள் குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம். இவ்வாறான நிலையில் எங்களை குறித்த நினைவினை செய்ய வேண்டாம் என தெரிவிப்பது கவலைக்குரியது.
இன்று உலகம் எங்கும் எங்கள் தாயாருக்கு நினைவு தினம் நடத்தப்பட்டுவரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடாத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.’ – என தெரிவித்தார்.