பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (ஏப்.,17) காலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 59.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில், விவேக், தன் குடும்பத்தினருடன் நேற்று (ஏப்.,16) காலையில் பேசி கொண்டிருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வடபழநியில் உள்ள, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் . அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில், உயிர் காக்கும், ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை 5 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் 1961ம் வருடம் நவம்பர் 19ம் தேதி விவக் பிறந்தார். அவருடைய இயற்பெயர் விவேகானந்தன். அவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 2009ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் வழங்கியதை பாராட்டி 2015ம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது
இயக்குனர் கே.பாலசந்தரால் 1987 ம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அவருடைய அற்புத நடிப்பாற்றலால் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வந்தன. புதுப்புது அர்த்தங்கள், உழைப்பாளி, நான்பேச நினைப்பதெல்லாம், கண்ணெதிரே தோன்றினாள், சாமி, வீரா, காதல் மன்னன், மின்னலே, பாளையத்து அம்மன், தூள், செல்லமே, பேரழகன், எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி, அந்நியன், போன்ற எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் விவேக் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சுந்தர் சி, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் விவேக் நடித்து வந்தார். அவருடைய நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் தழிழ்த்திரை உலகில் உள்ளனர். தன் யதார்த்தமான நகைச்சுவை நடிப்பாலும் மக்களுக்கு நகைச்சுவை மூலமா பல்வேறு நல்ல கருத்துக்களை சொல்லி வந்ததால் ‘சின்ன கலைவாணர்’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.
நடிகர் விவேக் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவு குறித்து திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகி்ன்றனர்.
திரைப்பட நடிகர் விவேக் சினிமாவில் நடிப்பதுடன், அப்துல் கலாம் மீது கொண்ட பற்றால், மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் செலுத்தி வந்தார்; மேலும், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். கொரோனா தடுப்பூசி குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன் குழுவினருடன், நேற்று முன்தினம், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டுக் கொண்டார். விவேக்கிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறினர்.
(நன்றி:தினமலர்)