நண்பர்களுடன் உணவருந்தும்போது, எதிர்பாராது கைக்குண்டு கழன்றுவிட, அந்நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக குண்டை தனது வயிறோடு அணைத்து வீரகாவியமான மாவீரன் அன்புவின் 36வது வீரவணக்க நாள் இன்றாகும்.
ஓ எம் தோழா உன் அன்பான நடத்தையால் உனக்கு அன்பாக நாமிட்ட பெயர் அன்பு. உன்னை இழந்தோம். எம் அன்பை இழந்தோம்.
அன்பு என்ற பெயரைக் கேட்டு சிலர் உன்னை சிறுவன் என்றோ மிருதுவான தோற்றமுடையவன் என்றோ நினைக்கலாம். 6 அடிக்கும் கூடிய உனது உயர்ந்த தோற்றத்தையும், தினவெடுத்த திரண்ட தோள்களையும் எம்மால் என்றும் மறக்கமுடியாது.
உன்னால் பயிற்றப்பட்ட எம் இளைஞர்கள் நீ இறந்த செய்தி கேட்டு உன்மீது கொண்ட அன்பால் அவர்கள் அடைந்த துயர் சொல்லமுடியாது. உன் வீரம் செறிந்த தியாக வரலாறு ஒவ்வொரு மக்களும் அறியவேண்டியது.
யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது குருநகர் இராணுவ முகாமில் இருந்து பொலிஸ் நிலையத்திற்கு உதவி கிடைக்காமல் தடைசெய்யும் பணியை செவ்வனே செய்து முடித்தவன். பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கு முன்பாகவே குருநகர் முகாமுக்கு மிக அண்மையில் சென்று கண்ணிவெடியை நிலைப்படுத்த வேண்டும். இது சரிவர நடந்தேறினால் மட்டுமே பொலிஸ் நிலையத் தாக்குதல் நடைபெற முடியும். இச்செயல் இடையில் குழம்புமானால் பொலிஸ் நிலையத் தாக்குதல் மட்டுமல்ல அதை நோக்கி அசைந்துகொண்டிருக்கும் எம் ஏனைய தோழர்கள் கூட உயிராபத்தை எதிர்நோக்கும் இக்கட்டான நிலைமை.
இராணுவத்தினர் இரவு ரோந்துக்கு புறப்படுமுன்னர் கண்ணிவெடியை நிலைப்படுத்தவும் வேண்டும். பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கும்வரை அமைதியைப் பேண வேண்டிய பொறுப்பான வேலைக்காக வெடிமருந்து (explosive) தேர்ச்சிபெற்ற அன்பு நியமிக்கப்பட்டான்.
வெற்றிகரமாக கண்ணிவெடிகளை நிலைப்படுத்திய அன்பு G3A3 என்ற தானியங்கி ரைபிளை தாங்கி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கியதும், முகாமை விட்டுப் புறப்பட்ட இராணுவத்தினர் மீது G3A3 ஆல் சரமாரியாக ‘இந்தா இந்தா’ என்று சுட்டு அவர்களை விரட்டிய அழகை இப்போதும் தோழர்கள் நினைவுகூர்ந்து கண்ணீர் சொரிகின்றனர்.
யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கி எமது தோழர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறும் வரை மிகப் பலம் பொருந்திய குருநகர் முகாமில் இருந்து எந்த ஒரு கவச வாகனமோ அல்லது இராணுவப் பிரிவையோ வெளியேறாமல் தடுத்து எம் வெற்றிக்கு உறுதி அளித்தவன் அன்பு.
எம்மோடு தங்கி இருக்கும் போது ஒருநாள் அன்பு தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை மெதுவாக வெளியே எடுத்தான். ஒரு நிழற்படம் கையிலிந்து நழுவிக் கீழே நிலத்தில் வீழ்ந்தது. அன்பு அதை எடுத்தான். அவன் நெஞ்சு படபடத்தது.
படத்திலிருந்து அவனை நோக்கியது பழக்கமான, அழகிய அவனின் காதலியின் உருவம். சாறி அணிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் இசைந்திருந்தது. ஒடிசலான கொடி இடையுடைய அந்த அந்த அழகிய பெண்ணின் ஒளிவீசும் பெரிய வட்ட விழிகள் அன்பை ஊடுருவும் நோக்குடன் பார்த்துக் கொண்டிருந்தன.
அன்பு அந்த விழிகளை நெடுநேரம் நோக்கியவாறு இருந்தான். அவன் உள்ளம் இனந்தெரியாத இனிய சோகத்தால் நிறைந்தது. விருப்பமான சோகப்பாட்டு ஒன்று மாலை வேளையில் தூரத்திலிருந்து கேட்கும்போது உணர்வது போன்ற சோகம் அது.
நிழற்படத்தின் மறுபக்கம் அன்பே மறந்துவிடாதே என்று எழுதப்பட்டு இருந்தது அதனுடன் இருந்த கடிதத்தை மீண்டும் படித்தான். கணக்கிட முடியாத தடவைகள் மீண்டும் மீண்டும் படித்ததால் கடிதம் கசங்கி கசங்கி மடிப்புகளில் விடத் தொடங்கி இருந்தது. நிழற்படத்தை மீண்டும் பார்த்தான்.
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா? எதிர்பார்! எதிர்பார்! காதலிக்கிறாயா? காதலி! காதலி! இனியவளே, தமிழீழம் கிடைக்கட்டும். நாம் இன்பமாக வாழலாம் என்று அவன் முணுமுணுத்தது எம் காதுகளுக்கு கேட்டதோ அல்லது நாம் உணர்ந்து கொண்டோமோ தெரியவில்லை.
நாம் தாக்குதலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் ரொக்கட் லோஞ்சரை அன்புதான் எடுப்பான். அதை தூக்கிச் செல்லும் உடல் வலுவும் சிறந்த பயிற்சியும் அன்புவிடம் இருந்ததால் அவனை நாம் ‘டேய் லோஞ்சா’ என்று அன்பாக அழைத்தோம்.
அன்று காலை நாம் எல்லோருமாக காலை உணவருந்திக் கொண்டிருக்கின்றோம். வெளியில் இருந்து வந்த அன்பு தானும் எம்முடன் சாப்பிடுவதற்காக பாயில் இருந்து சாப்பிடத் தொடங்குகின்றான். அவனுடைய பார்சலில் ஒரு வடை இருந்ததைக் கண்ட நண்பன் அதை பாய்ந்து எடுத்தான். அன்பான பறிபாடு, அன்பான ஒப்பந்தம், அன்பான பங்கிடல் மூலம் வடையை பங்கிட்டுக்கொண்டு மிக சந்தோசமாக குதூகலமாக உணவருந்திக் கொண்டிருந்தார்கள். கீழே பாயிலிருந்து சாப்பிடுவதால் தான் இடுப்பில் அணிந்திருந்த கைக்குண்டை அன்பு வெளியில் எடுக்கும்போது கைக்குண்டின் தடை நீக்கப்பட்டுவிட்டது. அன்புவின் முகம் மாறுகின்றது. கைக்குண்டை உடனே வெளியே எறிய வேண்டும். வெளியிலும் தோழர்கள் அமர்ந்திருந்தனர். உடனே தன்னுடைய வயிற்றோடு குண்டை அணைத்துக்கொண்டான். வெடியதிர்வுகளோ, அல்லது குண்டுச் சிதறல்களோ மற்றைய தோழர்களை பாதிக்கவிடாமல் அவை அனைத்தையும் தன் உடலால் ஏற்றுக்கொண்டான்.
‘டமார்’ என்ற பெரிய சத்தம். புகைமண்டலம். நாம் தூக்கி வீசப்பட்டோம். புகை விலகியபோது ஓ… கோரம்… அறை எங்கும் இரத்த வெள்ளம். அறைகளில் எல்லாம் சதைத் துண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கைக்குண்டால் துண்டாடப்பட்ட உடலின் பாகங்கள் மூன்று துண்டங்களாக்கப்பட்ட உடல்… எம்மை எல்லாம் காப்பதற்காக தன்னுடைய உடலால் வெடிகுண்டைத் தாங்கிய அன்பு, துண்டுகளாகக் காணப்பட்டான்.
எம்மோடு பேசிக்கொண்டிருந்தவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், திடீரென்று துண்டுகளாகக் கிடக்கும் போது எப்படித்தான் எம்மால் ஜீரணித்துக் கொள்ளமுடியும்?
உடலை அகற்றும்போது அன்புவின் டயறியின் பக்கங்கள் இரத்தத்தில் தோய்ந்து காணப்பட்டன.
அதில் ஒரு பக்கத்தில் மரணம் ஒருவனை அழிப்பதில்லை என்ற வசனம் காணப்பட்டது. ஆம் அன்புவின் மரணம், தியாகம் இன்னும் எத்தனையோ அன்புக்களை உருவாக்கியிருக்கிறது.
வீரவேங்கை அன்பு
முத்ததம்பி தனபாலசிங்கம்
முள்ளியான்.வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்.
நன்றி எரிமலை