யாழில் சித்திரை பண்டிகையில் சோகம்: பெண் குழந்தை மற்றும் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு!

0
258

யாழ். மட்டுவில் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியை சிறுவனொருவன் இயக்கியதில், அதில் மோதுண்டு பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதான பெண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

10 வயதான சிறுவன், வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியை இயக்கியுள்ளார்.

இதன்போது, வேகமாக இயங்கிய உந்துருளி முன்னால் நின்ற குழந்தை மீது மோதியுள்ளது.

இன்று (14) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,

யாழ். அரியாலையில் சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சித்திரைப் பண்டிகை தினமான இன்று காலை 8.45 மணியளவில் யாழ். நாவலர் வீதி கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசிகன் (வயது-8) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மூத்த சகோதரனான 12 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவரும் துவிச்சகர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

மூத்த சகோதரன் துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றுள்ளார். பின்னிருக்கையிலிருந்த இளைய சகோதரரன் வீதியின் பக்கம் வீழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடி வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சாரதியை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த இரண்டு சம்பவங்கள் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here