வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி சுழற்சி முறையிலான தொடர் போராட்டத்தில் கடந்த 1,515 நாட்களாக ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (14) புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம்.
எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள், இறுதியாக சிங்கள பொதுமக்கள் அவர்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.
பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐ.நாவில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் – என்றும் கூறினார்கள்.
நன்றி:உதயன்.