தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வு இம்முறை இணைய வழியில் நடாத்தப்பட்டுள்ளது.
பிரான்சு தமிழ்ச்சோலைகளில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களுக்கான குறித்த அரையாண்டு மதிப்பீட்டுத்தேர்வு கடந்த 10.04.2021 அன்று இணையவழியூடாக நடைபெற்றுள்ளது.
வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையான மாணவர்களுக்கு, காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை, வகுப்புகள் அடிப்படையிலான நேர அட்டவணைப்படி இத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. அனைத்து மாணவர்களும் தத்தமது வீடுகளில் இருந்தவாறே, இணையவழியாகத் தேர்வில் பங்குபற்றினர். தமிழ்ச்சோலை நிர்வாகிகளும் ஆசிரியர்களும் அவரவர் வீடுகளில் இருந்தவாறே காணொளி மூலமான மேற்பார்வையில் ஈடுபட்டனர்.
பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் 66 தமிழ்ச்சோலைகளிலும் இருந்து 3575 மாணவர்கள் இத்தேர்விற்குத் தோற்றியுள்ளதாகத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
தமிழ்ச்சோலை நிர்வாகிகள், தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவுகளையும் பெரும்பாலும் இணையமூடாகவே செய்திருந்தனர்.
பேரிடர்மிக்க நோய்த்தொற்றுக் காலத்திலும், தமிழ்மொழியைத் தளரவிடாது வளர்க்கும் முயற்சியில், தேர்வொன்றை இணையவழியூடாக வெற்றிகரமாக நடாத்தியமை ஒரு நெடும்பாய்ச்சல். இதனூடாக, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தொழினுட்ப ரீதியாக அடுத்தகட்டத்தில் கால்பதித்துள்ளமை தமிழார்வலர்கள் மத்தியில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளது.
2020/2021 கல்வியாண்டில் தமிழ்ச்சோலை வகுப்புகளும் பெரும்பாலும் இணையவழியாகவே நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.