கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4 இராணு வீரர்களில் தலைமறைவாகியுள்ள இராணுவ சிப்பாய் ஒருவருக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் நான்காவது எதிரியாகிய இராணுவ சிப்பாய் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றிருந்தால் சர்வதேச பொலிஸார் மூலமாக அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2010 ஆண்டு இடம்பெற்ற இந்த பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 இராணுவ சிப்பாய்களில் 3 பேர் வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வருகின்றனர். நான்காவது சந்தேகநபர் இல்லாமலேயே வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கு, நேற்று யாழ். மேல்நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இராணுவ பொலிஸ் அதிகாரி வழக்குத் தொடுநர் தரப்பில் சாட்சியமளித்தார்.
இதேநேரம் வழக்குத் தொடுநர் தரப்பு வழக்கை முடிவுறுத்துவதாக அரச சட்டத்தரணி திருமதி நளினி சுபாகரன் மன்றில் தெரிவித்தார்.
அப்போது நான்காவது சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அவரது சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகியிருக்கவில்லை. இதனையடுத்து நான்காவது சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
எனினும் சந்தேக நபர் வெளிநாட்டுக்கு ஓடியிருந்தால், சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று அவர்கள் மூலமாக அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தமது பிடியாணை கட்டளையில் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பிடியாணை தொடர்பாக பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி ஆகியோருக்கும் உடனடியாக அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எதிரி தரப்பு சாட்சிகளை அழைப்பதற்காக வழக்கை நீதிபதி எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.