மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை யாழ் திருச்சிலுவை கன்னியர்மட வைத்தியசாலையில் இயற்கை எய்திய செய்தி எம்மை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் ஆத்மா இறைவனடி சேர்ந்து சாந்தி பெற நாம் யாவரும் யாசிக்கின்றோம்.
இவ்வாறு க.வி.விக்னேஸ்வரன் எம்பி தெரிவித்தார். மேலும்,
கத்தோலிக்க மக்களின் புனிதவாரம் அனுஷ்டிக்கப்படும் இந்த வாரத்தில் அவர் இறையடி சேர்ந்தமை அவரின் இறை வாழ்க்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
ஆயர் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்றபோதும் அவர் வெறுமனே இறைபணியுடன் மட்டும் நின்றுவிடாது. மக்கள் பணியிலும் விசேடமாக தமிழ் மக்கள் சார்பான நலன்கள் தொடர்பில் அதீத அக்கறை காட்டியதுடன் அனைவரும் இந்ந நாட்டின் குடிமக்களாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் நேரிய வழிகாட்டியாக வாழ்ந்து எம்மையெல்லாம் அரவணைத்துச் சென்ற ஆண்டகை ஆவார்.
அவர்களின் 75 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். அவர் புகழின், பணியின் உச்சநாளாக அன்றைய தினம் அமைந்திருந்தது. அவரின் முகத்தில் ஒருவித அமைதி, அன்பு, இறைமை போன்றவற்றை நான் கண்டேன். சில நாட்களுக்குள்ளேயே அவரின் தேகநிலை மாற்றமடையப் போகின்றது என்பதனை எவரும் அறிந்திருக்கவில்லை,
அதன்பின்னர் அவரின் தேகநிலை மோசமடைந்து அவர் திடகாத்திரத்தை இழந்து வாழ்ந்தார். மன்னார் செல்லும் போதெல்லாம் ஆண்டகையைத் தரிசிக்காது திரும்பமாட்டேன். பேச்சுத்திறன் குறைந்திருந்த போதும் அவர் எம்மை அடையாளம் கண்டுகொண்டார்.
ஒரு மக்கள் சேவகரை, மகானை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைவதாக என்றார்.