பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்றோன் இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரைநிகழ்த்த இருப்பதாக சற்றுமுன்னர் எலிசே தரப்பில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட தளர்வான சுகாதாரக் கட்டுப்பாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. மருத்துவமனைகளின் சேவைகள் நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றன. தீவிர சிகிச்சைப்பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மருத்துவ சேவைகள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதால் சிகிச்சையளிப்பதற்கு நோயாளிகளை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அபாயக் குரல் கொடுத்துவருகின்றனர்.
பாடசாலைகளும் வைரஸ் தொற்று மையங்களாக மாறி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை விடுமுறையினை இரண்டுவாரம் முன்னதாகவே அறிவிப்பது அல்லது உடனடியாக மூடுவது தொடர்பான அறிவிப்புகள் இன்றிரவு வெளியிடப்படலாம்.
தொற்று அதிகமாக இருக்கும் 19 மாவட்டங்களிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் வெளிவரலாம் எனவும் ஊடகங்கள் எதிர்வு கூறியுள்ளன.
இதேவேளை, இயல்பு நிலைக்கு மக்களின் வாழ்க்கை திரும்பும் நம்பிக்கை தரும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த நல்ல செய்திகளும் வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.