களுவாஞ்சிக்குடி, காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மீட்ட இரண்டரை வயது சிறுமி வைத்தியசாலையில் சிசிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
தேற்றாத்தீவு, பாலமுருகன் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான உதயராஜ் ஹம்சவர்த்தினி (2 1/2 வயது) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் வழமை போல் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, தனது பிளாஸ்ரிக் பொம்மை கிணற்றில் வீழ்ந்த நிலையில், அதனை எடுக்க சிறுமி முற்பட்டுள்ளார். இதன்போதே தவறுதலாக கிணற்றில் வீழ்ந்துள்ளார். கிணற்றில் வீழ்ந்துள்ளதாக அறிந்து கொண்ட குறித்த சிறுமியின் தந்தை, சிறுமியை கிணற்றில் இருந்து மீட்டு, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
தொடர்ந்து சிசிச்சையளிக்கப்பட்டு வந்த குறித்த சிறுமி, சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி, சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் க. ஜீவராணியின் உத்தரவிற்கமைவாக, களுவாஞ்சிக்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்து பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும் படி காவல்துறையினரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.