கிளிநொச்சி – வட்டக்கச்சிப் பகுதியில் கடந்த 10ம் திகதி கொலை செய்யப்பட்ட அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி கோரியும், கொலை செய்யபட்டவரின் குடும்பத்தினரை சிறிலங்கா காவல்துறையினர் தாக்கியதைக் கண்டித்தும், சட்ட விரோத செயல்களை எதிர்த்தும் இன்று (17) புதன்கிழமை போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வட்டக்கச்சி சந்தியிலிருந்து இன்று காலை ஆரம்பமான இந்தப் போராட்டப் பேரணி உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது.
உழவு இயந்திரத்தில் வருகை தந்த போராட்ட குழுவினர், காக்கா கடைச் சந்தியிலிருந்து மாவட்டச் செயலகம் வரை போராட்ட பேரணியை முன்னெடுத்தனர். தமது பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துமாறும் இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டன
இதைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகனுடன் போராட்டக்காரர்கள் கலந்துரையாடியதுடன், பொலிஸ்மா அதிபர், பிரிதிப் பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டோருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.
இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மக்கள், தர்மபுரம் காவல்துறையினர் மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்னைவைத்துள்ளனர்.
அத்துடன், கடந்த 10ம் திகதி வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தன் சமூக செயற்பாட்டாளர் எனவும் இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர் கிராமத்தின் நலன்களில் அக்கறையுள்ள நற்பிரஜை என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவருடைய மரணத்திற்கு காரணம், கிராமத்தில் இடம்பெறுகின்ற கஞ்சா, கசிப்பு, சட்டவிரோத மணல் கடத்தல் ஆகியவற்றின் விளைவே என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொலையைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை காவல்துறையினருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் போது இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள், உறவினர்கள் மீது தருமபுரம் காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(உதயன்)