தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் தொழில்செய்து வந்த இலங்கையர்கள் பலர் தமது விடுமுறை நிறைவுற்றும் தாயகம் திரும்ப முடியாத நிலையில் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் Covid-19 தொற்றுக் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கத்தாரிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்கள் தங்களுடைய பயணங்களை ஒன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.ஒன்லைன் மூலமான தங்களுடைய விண்ணப்ப படிவங்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தொலைபேசி மூலம் இலங்கைக்கான கத்தார் தூதுவர் ஆலயத்தை தொடர்புகொண்டபோது அங்கிருந்து போதிய பதில் கிடைக்கப் பெறாத காரணத்தினால் கத்தார் தூதுவர் ஆலயத்திற்கு அங்கிருக்கும் இலங்கையர்கள் நேரில் சென்று தகவல்களை அறிந்து கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எனினும் நாடு திரும்புபவர்கள் இலங்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர். இத் தனிமைப்படுத்தலுக்காகவும் பயணச் சீட்டினை பெற்றுக் கொள்வதற்காகவும் மற்றும் இதர செலவுகள் உட்பட இலங்கை நாணயப் படி சுமார் 200,000.00 ரூபா செலுத்த வேண்டியுள்ளது. தூர இடங்களில் பணிபுரிபவர்கள் தூதுவர் ஆலயத்திற்கு தங்களுடைய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வாடகை வாகனம் மூலம் வருகை தந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளதோடு குறித்த நேரத்திற்கு பின்னர் தூதுவராலயம் மூடப்படுவதால் எதுவித பலனும் இன்றி மீண்டும் தங்களுடைய இருப்பிடத்திற்கு வாடகை வாகனம் மூலம் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.செல்வந்தர்கள் மாத்திரம் இவ்வாறு தங்களுடைய பணங்களை செலவழித்து நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பணவசதி இல்லாத நிலையில் உள்ளவர்கள் நாடு திரும்ப முடியாமல் குடும்பங்களை பிரிந்து கத்தாரில் சோகங்களோடு பல கஷ்டங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே இவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு நாடு திரும்ப ஏங்கித் தவிக்கும் இவ்வாறானவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சிறிலங்கா அரசு திரும்பிப் பார்க்குமா, என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றார்கள்.