காவல்துறை அதிகாரி ஒருவரால் கடத்தப் பட்டுக் கொல்லப்பட்டார் எனச் சந்தேகிக் கப்படுகின்ற யுவதி ஒருவரின் உருக்குலைந்த உடலை லண்டன் பெருநகரக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 33வயதான சாரா எவரார்ட்(Sarah Everard) என்ற யுவதியின் உடலே கென்ற்(Kent) வூட்லான்ட் (woodland) பகுதியில் மீட்கப் பட்டிருக்கிறது.
சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியான அவர் கடந்த மூன்றாம் திகதி தெற்கு லண்டனில் Clapham தெருவில் தனியே நடந்து சென்ற பின்னர் காணாமற்போயிருந்தார்.
கடந்த பத்துத் தினங்களுக்கு மேலாக பல காவல்துறை குழுக்கள் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தன.
யுவதி சாரா காணாமற்போனமை தொடர்பாக லண்டன் பெருநகரக் காவல்துறை (Metropolitan Police) அதிகாரி ஒருவர் ஏற்கனவே சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் ராஜதந்திரிகளது இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிரிவைச் சேர்ந்த (Parliamentary and Diplomatic Protection Command) 48 வயதான Wayne Couzens என்ற அந்த அதிகாரி தடுத்துவைக்கப் பட்டிருந்த அறையில் தலையில் காயத்துடன் சுயநினைவிழந்து காணப்பட்டதை அடுத்து நேற்றிரவு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார்.
செல்வி சாராவைக் கடத்திச் சென்று கொன்றிருக்கலாம் எனச் சந்தேகிக் கப்படுகின்ற பிரஸ்தாப அதிகாரி மீது மற்றொரு பெண்ணுடன் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பான முறைப்பாடு ஒன்றும் கடந்த மாதம் பதிவாகி இருந்தது என்று கூறப்படுகிறது. அந்த முறைப்பாட்டை லண்டன் பெருநகரக் காவல்துறையினர் கையாண்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.அது தொடர்பாக காவல்துறை சுயாதீனப் பிரிவு அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கண்காணிப்பு மிகுந்த லண்டன் தெரு ஒன்றில் காணாமற்போன யுவதியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்று பொலீஸார் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அவரது உடல் பாகங்களாக மீட்கப்பட்டி ருப்பது பொது மக்களிடையே பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.
“இந்தச் செய்தி நகர மக்களிடையே எந்தளவு அதிர்ச்சியையும் கவலையை யும் ஏற்படுத்தி உள்ளது என்பதை நான் அறிவேன்” என்று லண்டன் மேயர் சாதீக் ஹான் (Sadiq Khan) குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொல்லப் பட்ட யுவதியின் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்திருக் கிறார்.
குமாரதாஸன். பாரிஸ்.
12-03-2021