கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்றுமுன்தினம் வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் என்ற இரு பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.