பண்டாரவளை – பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் படுகொலையைத் தொடர்ந்து வட்டகொட ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கலவரத்தை தூண்டியதாக குற்றஞ்சாட்டி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான அரசியல் கைதி சி.வசீகரன் (62) நேற்று பல்லேகல சிறையில் காலமானார்.
பண்டாரவளையிலிருந்து பதுளை செல்லும் மார்க்கத்தில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சுமார் 41 பேர் இருந்தனர். 2000ம் ஆண்டு ஒக்டோபர் 2ம் திகதி அந்த முகாமுக்குள்ள நுழைந்த பெரும்பான்மையின காடையர்கள் 27 தமிழர்களை வெட்டிப் படுகொலை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பண்டாரவளையில் கலவரங்கள் வெடித்த நிலையில் ஒக்டோபர் 29ம் திகதி வட்டகொடை புகையிரத நிலையத்தில் திரண்ட பிரதேசவாசிகள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் உடரட்ட மெனிக்கே புகையிரதம் மற்றும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொடிமெனிக்கே புகையிரதங்களை படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து தாமதித்துச் செல்லும்படி கோரப்பட்டது.
இவ்வாறான நிலையில் தொடருந்து ஒன்றை மறித்த போது அங்கு வந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதன்போது தொடருந்து பெட்டியொன்று தீப்பற்றியது, பயணிகளை பிரதேசவாசிகள் காப்பாற்றினர்.
எனினும் பொலிஸார் அங்கு தமிழர்கள் 12 பேரை கைது செய்தனர். அதில் இருவர் இறந்த நிலையில், அவர்கள் உட்பட 10 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, 2016ம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்ட பொன்னையா வடிவேல் மற்றும் சிதபரம்பிள்ளை வசீகரன் ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பிந்துனுவெவ சம்பவத்திற்கு காரணமாவர்கள் என கைது செய்யப்பட்ட 41 பேரில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளடங்கலாக 19 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர். விசாரணைகளின் பின்னர் 2003 ஜுலை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு பெரும்பான்மையின நபர்கள் உட்பட நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். . இதை எதிர்த்து இவர்கள் மேன்முறையீடு செய்தனர். அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் பின் 2005ம் ஆண்டு மே மாதம் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.