நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறைபிடித்து சென்றனர். மேலும், மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகள், மீன்கள், மீன்பிடி சாதனங்கள் போன்றவற்றையும் இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று நாகையில் காரைக்கால், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்கக்கோரி காரைக்கால் முதல் ராமேஸ்வரம் வரையில் உள்ள 4 மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று நாகை மாவட்டத்தை சேர்ந்த அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்பட கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி இலங்கைக்கடற்பரப்பிற்குள் நுழைந்தனர் என குற்றம்சாட்டப்பட்டு 5 படகில் வந்த 43 பேர் பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் நேற்று முன்தினம் மதியம் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டு நேற்று காலை யாழ். மாவட்ட நீரியல் வளத்துறைத் திணைக்களத்திடம் கையளித்தனர்.
இவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரணை செய்த நீதவான் இம்மாதம் 22 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.