வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் அனைத்துலக பெண்கள் நாளான நேற்று திங்கட்கிழமை அமைதி முறையிலான கவனயீர்ப்புப் போராட்டமொன்று மாமாங்கம் ஆலயம் முன்பாக சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்ட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்துகொண்டனர்.
சர்வதேச மகளிர் தினத்தில் தங்கள் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது? தங்கள் உறவுகள் எங்கே? போன்ற பல்வேறு கேள்விகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு சர்வதேசத்தினூடாக ஒரு நீதி வேண்டும் என்ற அடிப்படையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை போராட்ட இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு காவல் நிலைய காவல்துறை அதிகாரிகளால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரியப்படுத்தி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையினை பாரப்படுத்த முற்பட்ட வேளை காவல்துறையினரால் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் உரிய இடத்தில் இல்லாமையால் அவ்விடம் விட்டுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
(நன்றி:உதயன்)