கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வட மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்டச் செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
ஆனால், இது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் முடிவு என்றும் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை அவசரஅவசரமாக அனைத்து ஆவணங்களும் அள்ளிச் செல்லப்பட்டன.
1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தின் படி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட்டது.
ஆனால், இன்று வரை அது நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியாருக்கு விற்கப்பட்டு வந்தன. சில தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கும் கொடுக்கப்பட்டு வந்தன. பௌத்த விகாரைகளுக்கும் புத்தர் சிலை வைப்பதற்கும் இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் அனுமதியும் வழங்கப்பட்டுவந்தது.
இந்த நிலையில், வடமாகாணத்திற்குரிய அனைத்து காணி ஆவணங்களும் அநுராதபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இதனால் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச காணிகள், பொதுக் காணிகள் கொழும்பை மையப்படுத்திய இலங்கை அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் பகிரங்கமாகச் செயற்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அநுராதபுரம் பிரதான மின்மாற்றியில் நேற்று இரவு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் வடமாகாணத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே செயலகத்திலிருந்து காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திற்குரிய காணி ஆவணங்கள் அனைத்தும் திருகோணமலை செயலகத்தில் இருந்தாலும் அங்கு சிங்கள அதிகாரிகள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.