கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறை மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
“கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிட வேண்டும். எமது எதிர்ப்பு இஸ்லாமிய மக்களுக்கானது அல்ல. இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்” என்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தினார்.
“எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே!, இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே!, மத நல்லிணக்கத்தை சிதைக்காதே! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் பொஸ்கோ புனித திரேசா தேவாலயத்திலும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது முஸ்லிம்களில் உடலை புதைப்பது தொடர்பில் அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்தி மீள் குடியேறி வாழ்ந்து வருகின்ற இரணைதீவு மக்களுக்கு சரியானதொரு முடிவை வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி தாமதிக்கப்படுவதை எதிர்த்து மலையகத் தேவாலயங்களிலும் இன்று (7) கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் ஹட்டன் பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் விசேட திருப்பலியும் நடைபெற்றது.
இதில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறிப்பிட்டளவான கத்தோலிக்க மக்கள் கறுப்பு உடைகளை அணிந்து கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தார்கள்.
மேலும், மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தமையும் குறிப்பிடதக்கது.
(நன்றி:உதயன்)