பாரிஸ் 14 ஆம் நிர்வாகப் பிரிவில்( XIV arrondissement) வெள்ளிக்கிழமை இரவு நூற்றுக் கணக்கான இளைஞர்கள் ரகசியமாக நடத்திய இன்னிசைக் களியாட்டத்தை பொலீஸார் தலையிட்டுத் தடுத்துள்ளனர்.
14-15 நிர்வாகப் பிரிவுகளில் அடங்கும் பூங்கா ஒன்றின் அருகே (parc Georges- Brassens) கைவிடப்பட்ட ரயில் பாதைப் பகுதி ஒன்றில் அமைந்திருக்கின்ற சுரங்க மறைவிடத்தை இரவுக் களியாட்ட அரங்கமாக மாற்றி அமைத்தே மிகவும் ரகசியமாக அந்தக் களியாட்டம் அரங் கேற்றப்பட்டுள்ளது.நகரசபை அதிகாரி கள் வழங்கிய தகவலை அடுத்து பொலீஸார் அப்பகுதியை முற்றுகை யிட்டு அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
மின் ஒளி, ஒலியமைப்பு சாதனங்கள் சகிதம் களியாட்டத்தை அங்கு ஏற்பாடு செய்தவர்கள் எனக் கூறப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 45 பேர்வரை விசாரணை செய்யப்பட்டு அபராதம் அறவிடப் பட்டதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் பிராந்தியத்தில் தீவிர வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இன்னமும் இதுபோன்ற ரகசிய ஒன்று கூடல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
(படம் :களியாட்டம் நடத்தப்பட்ட சுரங்க வாயில் – நன்றி :பரிஷியன் ஊடகம்)
குமாரதாஸன். பாரிஸ்.
06-03-2021