ஜெனிவா தீர்மானம் குறித்த உள்ளடக்கம் வெளியானது!

0
280

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை குறித்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் உள்ளடக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றாலும், நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்து தீர்மானத்தில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பூச்சிய வரைபு என அழைக்கப்படும் இந்த தீர்மானத்திற்கு மார்ச் 11 வரை திருத்தங்களை முன்வைக்க முடியுமென்பதோடு, இறுதி வரைபுக்கான வாக்கெடுப்பு மார்ச் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பெப்ரவரி 19ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வரைபு, “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் அமைந்துள்ளது.

இணைத்தலைமை நாடுகளை உள்ளடக்கிய ஆறு உறுப்பு நாடுகளான கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன இந்த தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

பூச்சிய வரைபு, 15 அறிமுக பந்திகளையும், 16 செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்த பந்திகளையும் கொண்டு அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சில அடிப்படை திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீண்டகால அடையாளமாக காணப்படும் வழக்குகள் உட்பட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் விரைவாகவும், முழுமையாகவும், பக்கச்சார்பற்ற முறையில் விசாரிக்கப்பட்டு, தேவைப்பட்டால், வழக்குத் தொடரப்படுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டுமென அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் சரியான மற்றும் சுயாதீனமான செயற்பாட்டை உறுதிப்படுத்த இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிவில் சமூக ஆர்வலர்களைப் பாதுகாக்கவும், அவர்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் விசாரணை செய்யவும், பாதுகாப்பின்மை மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு சிவில் சமூகம் பாதுகாப்பான மற்றும் அதிகாரம் செலுத்தும் வகையில் செயற்படக்கூடிய சூழலை உறுதிப்படுத்த இலங்கை அரசை குறித்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இயற்றப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யவும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மத சமூகங்களும் தங்கள் மதத்தை பின்பற்றவும், சமூகத்திற்கு வெளிப்படையாகவும் சமமாகவும் பங்களிப்பினை வழங்க அனுமதிப்பதன் மூலமும் மத சுதந்திரத்தையும் பன்முகத்தன்மையையும் வளர்க்க இலங்கை அரசாங்கத்தை குறித்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயமானது, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நடைமுறைகளை கட்டாயமாக வைத்திப்பதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும், இதுவரை நிறைவேற்றப்படாத மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்குமென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, பரிந்துரைகளை செயற்படுத்த தேவையான ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சிறப்பு கட்டுப்பாட்டாளர்கள் இதன் மூலம் ஊக்குவிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முன்னேற்றம் உள்ளிட்ட பொறுப்புணர்வை மேலும் மேம்படுத்துவதற்கான விருப்பங்களுடன் கூடிய விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதோடு, இலங்கையில் மனித உரிமை நிலைமை பற்றிய விசாரணையையும் அறிக்கையையும் மேலும் மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வுக்கு எழுத்துமூல புதுப்பிப்பை சமர்ப்பிப்பதற்கும் குறித்த தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் விளக்கக்காட்சியை வழங்குமாறு உயர் ஸ்தானிகராலயத்தை கோரியுள்ளதோடு, இரண்டு அறிக்கைகளும் மெய்நிகர் உரையாடல்களில் விவாதிக்கப்பட வேண்டுமெனவும், இலங்கை குறித்த தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here