பிரான்சில் DRANCY நகரபிதாவுடன் தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு!

0
865

பிரான்சு திரான்சி (Drancy) நகரசபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையையடுத்து, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இன்று (03.03.2021) புதன்கிழமை திரான்சி நகரபிதாவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் நகரபிதாவிடம் மலர்க்கொத்து வழங்கித் தமது நன்றியறிதலை வெளிப்படுத்தியிருந்தனர்.

இச்சந்திப்பில் திரான்சி நகரபிதா Aude Lagarde மற்றும் கூட்டுப் பணியாளர் Christian Bartholmé (Collaborateur cabinet) ஆகியோரோடு திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில் திருமதி கோமளா திலீப்குமார் (பரப்புரை), தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திரு.பாலக்குமாரன் (அரசியல் பிரிவு) மற்றும் திலீப்குமார் சுபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திரான்சி நகரபிதா தெரிவிக்கையில், கடந்த 11.02.2021 அன்று மாநகரசபை நிகழ்வில் இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப தமிழ் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் நியாயமான போராட்டத்தையும் வேண்டுகோளையும் ஏற்று அதற்கான ஆதரவை வேண்டி, பிரெஞ்சு அரசும் சர்வதேசமும் கவனம் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.

இதற்கு நன்றியினைத் தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தமது செயற்பாடுகள் குறித்து நகரபிதாவிடம் தெரிவித்ததுடன், திரான்சி ஈழ மக்களின் பிரதிநிதிகளாக திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் விளங்கும் என உறுதியோடு தெரிவித்திருந்தனர்.

பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான திரான்சி (Drancy) நகரின் நகர சபையினால் கடந்த மாதம் 11.02.2021 வியாழக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில்,
இலங்கையில் நடைபெற்றது தமிழினப் படுகொலை என்றும்,
இனப்படுகொலைசெய்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்தப்படவேண்டும் எனவும்,
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குத் தனித் தமிழீழம் தான் இறுதியானதும் உறுதியான தீர்வாக இருக்கமுடியும் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய தீர்மானம் திரான்சி நகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர்கள் நகரசபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அரசியற் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here