வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

0
201

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,

ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைபு அல்லது பூச்சிய வரைபில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென சிவில் அமைப்புக்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜர் வாசித்துக்காட்டப்பட்டது.

குறித்த மகஜரில்,

பூச்சிய வரைவு தீர்மானத்தில் அவசர மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை!

ஐ.நாவில் இடம்பெற்றுவரும் 46ஆவது மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, வடக்கு மசடோனியா, மலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இணையனுசரணைக் குழு முன்வைத்த இலங்கை மீதான முதலாவது வரைவுத் தீர்மானத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் எனக் கோருகின்றோம்.

இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ் பெண்களுக்கும் நீதி கோரி தமிழ் சமூகம் தொடர்ந்து போராடி வருகின்றது.

இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், திட்டமிட்ட இனப்படுகொலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு கோரி இன்று நடைபெற்ற பேரணி ஊடாக தமிழ் சமூகம் தங்களை வலியுறுத்துகின்றது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு இணையனுசரணை நாடுகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தற்போதைய மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், 2021 ஜனவரி 27 எனத் திகதியிட்ட தனது அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளை இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் (ஐ.சி.சி) பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. வல்லுநர்கள் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளர், வல்லுநர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உட்பட இருபதிற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் தனது சொந்த நீதிமன்றங்களினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து உலகளாவிய அல்லது வேற்று அதிகார வரம்பு மூலம் நீதியைப் பெறுவதற்கான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை நாங்கள் எதிரொலிக்கிறோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) போன்ற பொறுப்புக்கூறலுக்கான தற்போதைய சர்வதேச வழிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சில சர்வதேச நெருக்கடிகளின் எடுத்துக்காட்டுகள்,

  • இலங்கையில் ஐ.நா. பொதுச் செயலாளரின் பொறுப்புக்கூறல் நிபுணர் குழுவின் 2011 மார்ச் அறிக்கையின்படி, ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பல செய்யப்பட்டன என்றும் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • இலங்கையில் ஐ.நா. செயலாளர் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளரின் உள் ஆய்வுக் குழுவின் 2012 நவம்பர் மாத அறிக்கையின்படி, மே 2009இல் முடிவடைந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட (70,000) தமிழர்கள் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
  • இலங்கைப் படைகள் பலமுறை மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களுக்குள் குண்டு வீசியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் உணவு விநியோக மையங்களில்கூட குண்டுகள் வீசப்பட்டுள்ளன. பட்டினி மற்றும் மருத்துவ சிகிச்சை இன்மை போன்ற காரணங்களால் பலர் உயிரிழந்துள்ளனர்.
  • சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ஐ.டி.ஜே.பி) 2017 பிப்ரவரி மாதம் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலான விபரங்களை ஐ.நா.விடம் ஒப்படைத்துள்ளது.
  • 2013 ஏப்ரல் அன்று இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அறிக்கையின்படி, இலங்கையில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் போரினால் விதவைகளாகியுள்ளனர்.
  • குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அமுல்படுத்தப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா. செயற்குழு, உலகில் இரண்டாவது முறையாக காணாமல்போன வழக்குகள் இலங்கையிலிருந்து வந்தவை என்று கூறியது.

இலங்கை அரசாங்கம் செயற்படுத்தத் தவறிய வாக்குறுதிகள்,

  • அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் எதையும் செயற்படுத்தத் தவறிவிட்டன. அரசாங்கம் தானாக முன்வந்து இணைந்து வழங்கியவை உட்பட.
  • முந்தைய அரசாங்கம் இணைந்து வழங்கிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலமுறை மற்றும் திட்டவட்டமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தைச் செயற்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
  • தற்போதைய புதிய அரசாங்கம் ஒருபடி மேலே சென்று, 30/1, 34/1 மற்றும் 40/1 தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து அதிகாரபூர்வமாக விலகியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் செயன்முறையிலிருந்து விலகிச் சென்றது.
  • மேலும் குழந்தைகள் உட்பட பொதுமக்களைக் கொன்றதற்காக அப்போது தண்டிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சிப்பாய் தற்போதைய ஜனாதிபதியால் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • போர்க்குற்றங்களைச் செய்ததாக நம்பத்தகுந்த பல மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு ‘போர் வீரர்கள்’ என்று கருதப்படுகிறது. ஐ.நா. அறிக்கைகளில் போர்க்குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒரு அதிகாரிக்கு நான்கு நட்சத்திர ஜெனரலாகப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்தகால சம்பவங்களையும் நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாகக் கையாள எவ்வித வாய்ப்பும் இல்லையென்பதைத் திட்டவட்டமாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here