கிளிநொச்சி பொதுச் சந்தை யில் அமைக்கப்பட்டுள்ள 10 கடைகள் நான்காவது தடவையாகவும் உடைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் எவ்வித பொருட்களும் களவாடப்பட வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கடைகள் உரிமையாளர்கள் நேற்றுக்காலை கடைகளைத் திறப்பதற்காக வியாபார நிலையங்களுக்கு வந்தபோது தேங்காய் கடைகள் மூன்றும் சிறு பல்பொருள் வாணிபக் கடைகள் மூன்றும் பாய்க்கடை ஒன்றும் புடைவைக் கடைகள் இரண்டும் பாதணி கடை ஒன்றும் உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை அவதானித்தனர்.
இதனையடுத்து உரிமையாளர்களினால் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அவ்விடத்திற்கு விரைந்த தவி சாளர் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கடைகளைப் பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகக் கூறிச் சென்றனர்.
உடைக்கப்பட்ட கடைகள் அனைத்தும் தகரத்தினால் தற்காலிகமாக அமைக்கப்பட்டவையாகும்.
இச்சந்தை வளாகத்தினுள் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மரக்கறி பகுதியும் மீன் சந்தைப் பகுதியும் நிரந்தர கட்டடங்களாகவும் மிகுதி ஏனைய கடைகள் அனைத்தும் தகரங்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டவை என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இத் தற்காலிக கடைகள் ஆறு மாதங்களின் பின்னர் நிரந்தர கடைகளாக கட்டித்தரப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை நிரந்தர கடைகள் அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
இச்சந்தை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நான்கு தடவைகள் கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை கடந்த மாதம் 26 ஆம் திகதியிலிருந்து மாலை மூன்று மணியிலிருந்து கிளிநொச்சி மின்சார சபையினரால் மின்சாரம் துண்டிக் கப்படுவதால் இரவு வேளைகளில் சந்தைப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக் கின்றனர்.
இச் சந்தைக்கான இரவு நேரங்களில் கடமையாற்றுவதற்கென மூன்று காவலாளிகள் இருக்கின்றனர்.
இரவு 8 மணியுடன் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே திறக்கப்படுகின்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் கடைகள் ஏன் உடைக்கப்படுகின்றன என வர்த்தகர்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.