சுகாதாரச் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ, கோரிக்கைகள் தொடர்பிலோ கவனம் செலுத்தாத அரசாங்கம், அந்தச்சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்குப் பதிலாக இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“மக்களின் அறவழிப் போராட்டத்தினை மதிக்காமல், படைத்துறையின் வலு கொண்டு எதிர்கொள்ளும் போக்கை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. சுகாதார சிற்றூழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பிலே, அந்த சிற்றூழியர்களின் கருத்துக்களை கேட்காமல் உடனடியாகவே சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினை அந்த பணிகளுக்காக ஈடுபடுத்துவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
நிச்சயமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார சிற்றூழியர்களின் கோரிக்கை என்ன என்பதை உரியவர்கள் உடனடியாக கேட்டிருக்கவேண்டும்.
அவ்வாறு அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டு, அவர்ளுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுவே முறையான செயற்பாடாகும்” என்றார்.