பிரான்சில் கடந்த 13.02.2021 அன்று சாவடைந்த தமிழீழத் தேச உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி ( கிருபை நடராசா) அவர்கள் “தமிழின விடுதலைப் பற்றாளர்’’ என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மதிப்பளிப்பு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:-
தமிழீழ தேசத்தைத் தனது நெஞ்சில்தாங்கி இறுதிவரை வாழ்ந்தவர் தம்பிஐயா கிருபானந்த மூர்த்தி (கிருபை நடராசன்) அவர்கள். ஈழதேசம் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு போன்ற இடங்களில் வாழ்ந்து தாய் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பங்காளனாய் ஆனதால் தொடர்ந்தும் அங்கு வாழமுடியாத புறச்சூழலினால் புலம் பெயர்ந்து பிரான்சு நாட்டில் சார்சல் மாநகரத்தில் வாழ்ந்து வந்த இவர், கடந்த 13.02.2021 சனிக்கிழமை சுகயீனம் காரணமாகத் தனது 70 ஆவது வயதில் சாவடைந்தார்.
இவர் சிறந்த பண்பு கொண்ட மனிதர் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் 73 வருடகால அகிம்சை, ஆயுதவழிப் போராட்டத்தின் ஒரு சாட்சியாகவும் இருந்தவர். தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராகத் தன்னால் முடிந்தளவு போராடவேண்டும் என்ற போர்க் குணம்மிக்க ஒருவராக எம்முன்னால் நின்றவர்.
2009 இல் எம் தேசத்தில் சிங்கள, பௌத்த அரசால் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு எதிராகப் பிரான்சு மண்ணிலே நடாத்தப்பட்ட அனைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் எமது மக்களோடு ஒருவராய் இரவு பகல் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டவர். எம்மால் தாயகம் நோக்கி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்கள், அடையாள உண்ணா மறுப்புப் போராட்டங்கள், ஜெனீவா பேரணிகள் என்பவற்றில் முதன்மையானவர்களில் ஒருவராகவும், பிரான்சில் இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்பாக பெப்ரவரி 4ஆம் நாள் நடாத்தப்படும் கரிநாள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிங்கள தேசத்திற்கு அவர்களின் மொழியிலே 70 வருடங்களுக்கு மேலாக தமிழினத்திற்கு எதிராக சிங்கள ஆட்சியில் அமர்ந்த அதன் தலைவர்கள் செய்த கொடுமைகளையும் உரக்கக் கூறிவந்தவர். அந்த உரைகளில் தமிழினத்தின் விடுதலையையும், இழந்து போன உரிமைக்கான தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்தையும், அதனை வழிநடத்திச்சென்ற தேசியத் தலைவனையும், மாவீரர்களையும் எவ்வாறு இவர் நெஞ்சில் சுமந்திருந்தார் என்பதை நாம் கண்கூடாகக் கண்டிருந்தோம்.
இங்கு வாழும் எமது மூதாளர்கள் உளவியல் நலன் கருதி உருவாக்கப்பட்ட பிரான்சு மூதாளர் இல்லத்திலும் மூத்த உறுப்பினராய் இருந்துள்ளதுடன், வாரத்தில் ஒருமுறை நடைபெறும் சந்திப்பில் முதன்மையாளராகக் கலந்து கொண்டு எமது எதிர்பார்ப்புக்கு அமைய இவரால் அன்றைய நாள் கலகலப்பும், சந்தோசமுள்ளதொரு நாளாகவும் நிறைவு பெறுவதையும், அவரிடம் இருந்த ஆழமான விடுதலை உணர்வையும் அரசியல் நிலைப்பாட்டின் நேரடிச் சாட்சியங்கள் பலவற்றையும் கண்டும் கேட்டுமிருக்கின்றோம். பொதுவில் இவரின் தமிழ்மீதான, இனம் மீதான பற்றுதல்களை பல பொது நிகழ்வுகளிலும் நாம் பார்த்திருக்கின்றோம்.
இன்றைய காலத்தில் இவரின் இழப்பானது இட்டு நிரப்ப முடியாத தொன்றாகவே இருக்கின்றது. இவரின் பிரிவால் துயருற்றிருக்கும், துணைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள், மக்களுடன் நாமும் எமது துயரினைப் பகிர்ந்துகொள்வதுடன், தமிழீழ தேச விடுதலையை நெஞ்சில் தாங்கி, புலத்தில் அதற்காகக் குரல்கொடுத்து சாவடைந்த தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி அவர்களுக்கு “தமிழின விடுதலைப் பற்றாளர்’’ என்ற மதிப்பளித்தலை வழங்கிப் பெருமைப்படுத்துகின்றோம்.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.