பிரபல யூரியூப் இரட்டையர்களான (YouTubers) மக் பிளை-கார்லிற்றோ(McFly and Carlito) இருவரும் அதிபர் எமானுவல் மக்ரோனின் சவாலை ஏற்றுப் பத்து மில்லியன் பார்வையாளர்களைக் கவரும் நோக்குடன் காணொலிப் பாடல் ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருக்கின்றனர்.
வைரஸை எதிர்த்து வாழ்வதற்கான சுகாதார நற்பழக்கங்களை வலியுறுத்துகின்ற அந்தப்பாடல் பத்து மில்லியன் பார்வைகளை எட்டினால் எலிஸே மாளிகைக்குள் சென்று தாங்கள் விரும்பிய இடத்தில் வீடியோ கிளிப் ஒன்றை படமாக்க இருவருக்கும் அரிய வாய்ப்புக் கிட்டும்.
நாட்டின் அதிபருடன் பந்தையம் கட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொலி மிக வேகமாக ரசிகர்களது பார்வையைக் கவர்ந்து வருகிறது.
“எனக்கு நினைவிருக்கிறது” (“Je me souviens”) எனத் தொடங்கும் அந்தப் பாடல் மாஸ்க் அணிவது முதற்கொண்டு வாகனங்களில், மின் தூக்கிகளில், பொது இடங்களில் சமூக இடைவெளி பேணித் தள்ளி நிற்பது (gestes barrières) வரை பொது விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றது. வயல் வெளி, நகரங்கள், தெருக்கள் எனப் பல பொது இடங்களில் அது படமாக்கப்பட்டுள்ளது.
“… என் குழந்தைகளுக்காகவும்
எனது பிரான்ஸ் நாட்டுக்காகவும்
நான் மாஸ்க்கை அகற்ற முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.. எனினும் பொறுமை இழந்து விடுவேன் என அஞ்சுகின்றேன்…”
“.. வயல்களில் மாடுகளுக்கும் வான் கோழிகளுக்கும் இடையில் மட்டுமே இடைவெளிகள் இருந்த பழைய உலகை நினைத்துப்பார்க்கிறேன்.. அந்த உலகை மீண்டும் கண்டுபிடிக்க விரும்பினால் இப்போது எமக்குள் இடைவெளியை பேணுவோம்… “
-இவ்வாறு செல்கிறது அந்தப் பாடலின் வரிகள்…
இறுதியாக தெருவில் மாஸ்க் அணியாமல் பாடிக் கொண்டிருக்கும் அவர்கள் பொலீஸாரிடம் சிக்குவது போன்ற காட்சியுடன் பாடல் முடிகிறது. ‘நாட்டின் அதிபர் கேட்டுக் கொண்டதால் தான் பாடுகின்றோம்’ என்று கூறி இருவரும் அபராதம் செலுத்த மறுக்கின்ற காட்சியோடு காணொலி நிறைவுறுகிறது.
(படம் :YouTube screenshot)
குமாரதாஸன். பாரிஸ்.
21-02-2021