ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. மார்ச் 23ஆம் திகதி வரை நான்கு வாரங்கள் இந்தக் கூட்டத்தொடர் இடம்பெறும். கொவிட் தொற்றுக் காரணமாக இம்முறை கூட்டத்தொடரை வீடியோ தொழில் நுட்பத்தின் ஊடாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இம்முறை கூட்டத் தொடரில் கலந்துரையாடப்படவுள்ளன. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்சலட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள விசேட அறிக்கை இரண்டாம் நாள் அன்று சமரப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்த அறிக்கைக்கான பதில் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்முறை கூட்டத் தொடரில் ஏற்படும் நிலமைகளை எதிர்கொள்வதற்காக கடந்த பல வாரங்களாக அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை அனுப்பும் ஆவணங்களுக்குப் பதிலளித்து நாட்டின் நிலமையும் இந்த உலகத்தின் யதார்த்தமும் இதுதான் என்பதை முன்வைக்கக்கூடிய நிலமை ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா தமிழினப்படுகொலை அரசு சாதாரணமாகத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 8.30 மணி அளவில் தினேஷ் குணவர்த்தன வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. . மனித உரிமைகள் பேரவை 2006ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி உருவாக்கப்பட்டது. இதன்படி, அடுத்த 15ஆம் திகதியுடன் 15 வருடங்களாகின்றன.
இதேவேளை புலம்பெயர் தேசங்களில் சிறிலங்காவிற்கு எதிராக நீதி கோரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க அனைவரும் தயாராக வேண்டும் என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.