முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணையில் நீண்டகாலமே கேரளா தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சட்டப் போராட்டங்கள் மூலம் தமிழக அரசு நமக்கான உரிமையை நிலை நாட்டி வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள செல்லுகிற தமிழக அதிகாரிகள் தாக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையை நிறுத்துமாறு ஒட்டுமொத்த தமிழகமே மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
இதற்காகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசோ, உச்ச நீதிமன்றத்தில், முல்லை பெரியாறு அணையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பணியமர்த்த தேவையில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே கேரள அரசு கோரினால் அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று கூறியிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் வாழ்வுரிமை பிரச்சனைகளில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. அதனையேதான் தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தற்போது வெளிப்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு மாநிலம்; இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை மதித்து தமிழ்நாட்டின் கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்காக மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையைக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், அணைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஆபத்து என கூறியிருப்பது ஏற்புடையது அல்ல.
முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு என தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகளுக்காக வாழ்வுரிமைகளுக்காக போராடுகிறவர்கள் .. போராடுகிற இயக்கங்கள் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் இயக்கங்களே என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
ஆகையால் முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க போராடுகிற- முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராடுகிற- இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கிறவர்களாலேயே “அணைக்கு ஆபத்து” என காரணம் கூறுவதை ஏற்கவே முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி