விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று யாழ்.மாவட்டத்தில் ஆராயப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போட்டியிடும் போராளிகள் தேர்தலில் தோல்வியைச் சந்திப்பார்களாயின் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்பொழுது அரசியல் களநிலவரங்களைப் பார்க்கின்ற போது இனவாதத்தைத் தூண்டி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தரப்பினர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து விட்டதாக மார்தட்டி, இனவாதத்தை தூண்டி கடந்த காலங்களில் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். அதுமட்டுமின்றி முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவதாக சர்வதேசத்திற்கு ஒரு போலியான பிரசாரத்தை காட்டிக் கொண்டவர்கள், அவர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தையோ கருத்து வெளியிடும் சுதந்திரத்தையோ வழங்கியிருக்கவில்லை. வடக்கிலிருந்து உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமைக்கும், ஒரு இராணுவ வீரர் கூட குறைக்கப்படாமைக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள் என்றே காரணம் கூறி வந்தனர். இந்நிலையில் அதே அணியினர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இவ்வாறான தருணத்தில் முன்னாள் விடுதலைப் போராளிகளைக் கொண்ட அணியொன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது இனவாதிகளுக்கும், புலிகளை மையமாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் ஏது நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்’ என்று மேலும் தெரிவித்துள்ளார்.
Home
சிறப்பு செய்திகள் முன்னாள் போராளிகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அரசியல் பாதிப்புக்களை ஏற்படுத்தும்:சுரேஷ்