19-02-1986 அன்று இன்றைய நாளில் உடும்பன் குளப்பகுதியில் 120 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த 36ஆவது மறக்க முடியாத நினைவு நாள் இலங்கை தமிழர்கள் வரலாற்றில் கிழக்குமாகாணத்திலும் சிறீலங்கா இராணுவத்தினால் கொடூரமான முறையில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன.
இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை பெண்களை வெட்டியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர். இந்த வகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்கு மாகாணம் கண்டிருக்கின்றது.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சிங்கள இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்ப முடியாமல் போனது. இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உடும்பன் குளம் என்ற கிராமத்தில் தான் கொடூரமான படுகொலைச் சம்பவம் ஒன்று 1986 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. வளமான மண்ணில் வளமாக வாழ்ந்த உறவுகள் 36 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் அங்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு இப்படுகொலையானது மறக்க முடியாத ரணவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் கொண்ட அழகிய தொரு கிராமமாகும். உடும்பன் குள கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் வயல் விதைப்புக்களிலும் அறுவடைக் காலங்களிலும் தங்கள் குடும்பத்துடன் சென்றுஅருகில் உள்ள மலைகளில் வடிகாலிலேயே வாழ்ந்து வந்தார்கள். அக்காலப்பகுதியில் தங்கள் உணவுத் தேவைக்கு மலைகளில் உள்ள மேடுகளில் சோளம் வெண்டி கீரை போன்றவற்றை பயிரிட்டும் அருகில் உள்ள குளம் ஒன்றில் மீன்களை பிடித்தும் உணவாக்கிக் கொள்வார்கள்.
இவ்வாறு தங்கள் நிலங்களில் நிம்மதியாக வாழ்ந்த இம்மக்கள் தங்களுக்கு இப்படி ஒரு கொடூரம் நடக்கவிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
இப்படுகொலைச் சம்பவமானது தற்செயலாக வந்த இராணுவத்தினராலோ அல்லது பதில் நடவடிக்கை என்ற ரீதியிலோ இப்படுகொலைகள் செய்யப்படவில்லை. மாறாக இம்மண்ணில் இருந்து இவர்களை விரட்டுவதே இவர்களின் உள்ளார்ந்த நோக்கமாகும் என்பதை இம்மக்கள் பின்னாளில் அறிய முடிந்தது.
19-02-1986 அன்று காலை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமில் இருந்த இராணுவம் ஏற்கனவே திட்டமிட்டபடி உடும்பன்குளம் கிராமம் நோக்கி சென்றது. அக்கிராமத்தைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் தங்களோடு பிறமத காடையர்களையும் இணைத்துக் கொண்டனர். கிராம மக்களில் கூடுதலானவர்களை மாசிமாத அறுவடைக்காலம் என்பதால் வயல் வேலைகளுக்குச் சென்று விடுவார்கள் அன்றும் அப்படித்தான் வயல் வேலைக்குச் சென்று விட்டார்கள். வயலில் வேலை செய்த அப்பாவி பொதுமக்களை கைது செய்து கைகளையும் கண்களையும் கட்டி துன்புறுத்தினார்கள். ஆண்களுடைய உறுப்பை அறுத்தார்கள். பின்னர் அவர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு வைக்கோலை போட்டு எரித்து விட்டுச் சென்று விட்டார்கள்.
இந்தப் படுகொலை சம்பவத்தினை பற்றி வன்னியிலிருந்து சென்ற ஒரு பத்திரிகையாளர் இந்த படுகொலை சம்பவத்தில் உயிர் தப்பியவர்களை நேர்காணல் செய்து மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்றுவரை இப்படுகொலைக்கு நீதிகிடைக்காத நிலையில் சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பு தொடர்கின்றது.
(ஊடகன்)